பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த ஆசிரியரை கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், கொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 16-ம் தேதி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை, அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 15 வயது மாணவி ஒருவர் பார்த்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது பஸ் வசதி இல்லாததால் பைக்கில் வீட்டில் கொண்டு விடுவதாக அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் கிரண் கருணாகரன் (43) கூறியுள்ளார். இதை நம்பிய மாணவி ஆசிரியரின் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
ஆனால், வீட்டுக்கு செல்லும் வழியில் மாணவிக்கு ஆசிரியர் கிரண் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், பள்ளியில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், இதை யாரிடமும் கூற வேண்டாம் என பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் 2 ஆசிரியைகள் மாணவியின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். அதேவேளை, தனக்கு நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது வகுப்பு தோழிகளிடம் கூறியுள்ளார். இதை கேட்ட சக மாணவிகள் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கூறியதுடன் போலீசிலும் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பதுங்கி இருந்த ஆசியர் கிரண் கருணாகரனை கேரள போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், பெற்றோர் அளித்த புகாரை ஏற்க மறுத்து அவர்களுக்கு அழுத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகளையும் போலீசார் கைது செய்தனர்.