என்.எல்.சி.யை வெளியேற்ற பாமக போராட்டம்: எச்சரிக்கை செய்த அன்புமணி

என்.எல்.சி.யை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவர்

அறிவித்துள்ளார்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மோசமடைந்து வருவதாக கடலூர் மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுமார் 44 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வீடு, நிலம் கையகப்படுத்தி என்எல்சி நிர்வாகம் தொடங்கப்பட்டது என்றும் கடந்த 66 ஆண்டுகளில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் உரிய இழப்பீட்டுத் தொகையோ வழங்காமல் இன்று வரை மக்களை அகதிகளாக என்எல்சி நிர்வாகம் வைத்துள்ளது என்றும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றி வரும் என்எல்சி நிர்வாகம் நிலக்கரி தோண்டுவதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்எல்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்

.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்.எல்.சி.யின், சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் தர மறுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை அல்லது நிதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் ஆசை காட்டியிருக்கிறது.

என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிலங்கள் சுமார் 25,000 குடும்பங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அந்த குடும்பங்களில் 1827 பேருக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டது. மீதமுள்ள 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் வழிகாட்டுதலில் தான் அனைத்து பணிகளும் நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதே அமைச்சர்கள் தான் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.

ஆனால், இப்போது என்.எல்.சி.க்கு ஆதரவாக களமிறங்கி இருக்கின்றனர். வாக்களித்த மக்களின் நலன்களுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ள அவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அவர்களின் முயற்சிகள் பலிக்காது. என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும்படி மக்களை நெருக்கடிக்குள்ளாக்க கடலூர் மாவட்ட ஆட்சியரோ, நிர்வாகமோ முயன்றால் அதை பா.ம.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் காப்பாற்றுவதற்காக என்.எல்.சி.யை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை எனது தலைமையில் பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்” என்று கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.