திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் வீடியோ காட்சிகள் வைரலானதால் அதிகாரிகள் இன்று (22-ம் தேதி) விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் இந்திரவனம் ஊராட்சியில் 15-வது நிதிக் குழு மானியத்தின் மூலம், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் (2022-23) கீழ் ரூ.3.69 லட்சம் மதிப்பில் 52 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க அனுமதி வழங்கப்பட்டன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு வீட்டுக்கு முன்பாக சிமென்ட் கட்டை மட்டும் அமைக்கப்பட்டன. குடிநீர் குழாயை புதைக்கவில்லை. குடிநீர் இணைப்பும் கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. அதில், சிமென்ட் கட்டையை எளிதாக பிடுங்கும் இளைஞர், குழாய் புதைக்கப்பட்டதற்கான தடயம் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் முறைகேடு செய்துள்ள ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து விசாரணை நடத்தி வரிவான அறிக்கையை சமர்ப்பிக்க ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பொறியாளர்கள், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆகியோர், இந்திரவனம் கிராமத்தில் இன்று (22-ம் தேதி) ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடிநீர் குழாய் புதைக்காமல் இருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள் கூறும்போது, “குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கும் பணி சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டன. திட்டப்பணியின் விவரம் குறித்து அறிவிப்பு பலகையை ஒப்பந்ததாரர் வைக்கவில்லை. சிமென்ட் கட்டையை மட்டும் முதற்கட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் புதைக்கும் பணி தொடங்கவில்லை. 52 வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு விரைவாக கொடுக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படும்” என்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாஸ்கரன், சேத்துப்பட்டு நகர செயலாளர் கிஷோர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டை மூடி மறைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.