நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே பெட்டட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு அனுசியா என்ற மனைவி இருந்துள்ளார். கர்ப்பிணி பெண்ணான அணுசியாவுக்கு கடந்த நவம்பர் 10ஆம் தேதி குன்னூரில் இருக்கும் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
இரு நாட்களுக்குப் பின் அவருக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஒரு நாள் முடிந்தும் அனுசியா மயக்கம் தெரியாமல் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து, அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனுசியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதையடுத்து, அனுசியாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை பிறந்து வெறும் பதினொரு நாளில் அந்த குழந்தையை அனாதையாக விட்டுவிட்டு தாய் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.