ஒரு குழந்தையின் பிறப்பு என்பது பெற்றோரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்று. குழந்தை பிறந்த பிறகு பெற்றோர்கள் தங்கள் முழுக் கவனத்தையும் அவர்கள் மீது செலுத்த விரும்புவார்கள். ஆனால் அப்போது குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே விடுப்பு என்பது கொடுக்கப்படும். இதனால் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாகத் தந்தைகளுக்கும் உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனது செல்ல மகளைப் பார்த்துக் கொள்வதற்காக மூத்த துணைத்தலைவர் பதவியை விட்டுவிட்டு தனது வேலையையும் ராஜினாமா செய்திருக்கிறார் ஐ.ஐ.டி. கரக்பூர் பட்டதாரி.
அன்கிட் ஜோஷி, ஐ.ஐ.டி. கரக்பூரில் படித்து முடித்துவிட்டு முன்னணி தனியார் நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராக வேலைப் பார்த்து வந்தார். அவருக்குத் தற்போது குழந்தை பிறந்துள்ளதால் அந்நிறுவனம் பேட்டர்னிட்டி (paternity) விடுமுறையை அவருக்கு வழங்கியுள்ளது. இருப்பினும் அன்கிட் ஜோஷிக்கு அந்த விடுமுறை நாள்கள் போதாதக் காரணத்தால் அதிக சம்பளம் கிடைக்கக்கூடிய தனது வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்.
இது தொடர்பாக அன்கிட் ஜோஷி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “சில நாள்களுக்கு முன்புதான் எனக்கு மகள் பிறந்தாள். அதிக சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டேன். இது ஒரு விசித்திரமான முடிவுதான். எல்லோரும் இது உனக்கு மிகவும் கஷ்டமான நாள்களைக் கொடுக்கும் என்று சொன்னார்கள். ஆனால் என் மனைவி ஆகான்ஷா என் பக்கம் இருக்கிறார். அதுதான் எனக்கு முக்கியம்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி வேலிக்கு நாங்கள் சுற்றுலா சென்றிருந்தபோது எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஸ்பிட்டி எனப் பெயரிட முடிவெடுத்திருந்தோம். கடந்த மாதம் எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தபோது எங்கள் கனவு நனவாகியது. எங்கள் வாழ்க்கை முழுமையடைந்தது. என் மகள் பிறப்பதற்கு முன்பே என் பேட்டர்னிட்டி விடுப்பு முடிந்தாலும், எனது முழுநேரத்தையும் அவளுடன் கழிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் நான் வேலைப் பார்க்கும் நிறுவனம் அதற்கு அனுமதிக்காது என்று தெரியும். தந்தையாகப் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது என்று என் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். இரவில் தாலாட்டு பாடுவது, அவளைத் தூங்க வைப்பது போன்ற தருணங்களை நான் ரசிக்கிறேன். சில மாதங்களுக்குப் பிறகு நான் வேலைக்கு விண்ணப்பிப்பேன். ஆனால் அதுவரை, நான் இந்த நேரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி என் மகளுக்காக இருப்பேன்.
ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் தந்தைகளுக்கான பேட்டர்னிட்டி விடுப்பை எவ்வாறு வழங்குகின்றன என்பதை நினைத்தால் அது சற்று வருத்தமளிக்கிறது. இது குழந்தைகளுடனான தந்தையின் இணக்கத்தைக் குறைப்பதோடு, தந்தை என்ற பொறுப்பையும் குறைக்கிறது. நான் எடுத்திருக்கும் முடிவு எளிதானது அல்ல. ஆனால் எதிர்காலத்தில் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன். கடந்த ஒரு மாதத்தில் நான் என் குழந்தையோடு செலவிட்ட நேரங்கள் இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதைவிட நிறைவாக இருந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது பாராட்டுகளையும், கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.