ராமநாதபுரம்: தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிவில் சப்ளை சிஐடி போலீசார் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 2 டன் துவரம் பருப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக மொத்தம் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்கள் பதுக்கல் தொடர்பான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் சிவில் சப்ளை சிஐடி டிஜிபி மேற்பார்வையில் தொடர்ந்து சிவில் சப்ளை போலீசார் தீவிர வாகன தணிகையிலும், குடோன்களிலும், அரிசி ஆலைகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ராமநாதபுரத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 26 டன் ரேஷன் அரிசியும், 2 டன் பருப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 27 பேர், பருப்பை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 2 பேர், வீட்டு உபயோக சிலிண்டர்களை முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 3 பேர் என மொத்தம் 32 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தல் கும்பலிடம் இருந்து 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. போலீசாரின் வாகன சோதனை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.