டிசம்பர் 6 வரை… கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் NIA நீதிமன்றம் அதிரடி… இறுகும் விசாரணை!

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிவிபத்து, மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு என தென்னிந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மங்களூரு விவகாரத்தில் கோவைக்கும் தொடர்பிருப்பதாக கர்நாடக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சூழலில் கோவை கார் சிலிண்டர் வெடிவிபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

இவர்கள் கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்தபடியே நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் என்.ஐ.ஏ நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேரையும் வரும் டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

மறுபுறம் மங்களூரு விவகாரம் தொடர்பாகவும் கோவையில் விசாரணை நடந்து வருகிறது. கோவையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வேறு யாராவது தங்கியுள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் ஷாரித் தங்கியிருந்த விடுதிக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்ட நிலையில், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஷாரித்தின் நடமாட்டம், அவர் சந்தித்த நபர்கள் குறித்து கோவை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை கார் வெடிப்புச் சம்பவம் குறித்த தகவல்களை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப் பெறவும் தனிப்படை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து 2வது நாளாக கோவையில் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மங்களூரு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரித் கோவையில் தங்கியிருந்த இடங்கள், சென்று வந்த இடங்கள், தகவல் தொடர்பு கொண்டவர்கள் என பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் ஷாரித் தங்கியிருந்த விடுதிக்கு சீல் வைத்துவிட்ட நிலையில், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர். ஷாரித்தின் வாட்ஸ்-அப் முகப்பு படத்தில் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் புகைப்படத்தை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இவருடைய வாட்ஸ் அப் குழு நவம்பர் 18ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருந்துள்ளது.

எனவே ஆதியோகி புகைப்படம், அதன் பின்னணி, ஈஷா யோகா மையத்திற்கு சென்று வந்தாரா போன்ற கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ’ஷாரித் பிரேம் ராஜ்’ என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வந்ததும், தொலைபேசி அழைப்புகளின் வழியாக பேசாமல், வாட்ஸ்-அப் கால்கள் மூலமாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தகவல்கள் பரிமாற்றம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.