மோர்பி: குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் மச்சு நதி மீது அமைந்துள்ள தொங்கு பாலம் கடந்த மாதம் 30-ம் தேதி அறுந்து விழுந்தது. இதில் 40 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர். அண்மைக்காலத்தில் நாட்டில் நடந்த மோசமான பேரிடர் சம்பவமாக இது கருதப்படுகிறது.
விபத்து தொடர்பாக, பாலத்தை பராமரித்து வந்த ஓரிவா குழுமத்தின் 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஜாமீன்மனு மோர்பி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விபத்து தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கையை அரசு வழக்கறிஞர் விஜய் ஜானி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதையடுத்து அவர் கூறியதாவது:
பாலத்தின் பராமரிப்பு, இயக்கம் மற்றும் பாதுகாப்புக்கான ஒப்பந்தம் ஓரிவா குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் விபத்து நாளில் பாலத்தில் செல்ல 3,165 டிக்கெட்களை விற்பனை செய்துள்ளது. அனைத்து டிக்கெட்களும் விற்பனை செய்யப்படவில்லை. என்றாலும் நூற்றாண்டு கால பாலத்தின் தாங்கும் திறனை நிறுவனம் மதிப்பிடவில்லை.
கேபிள்கள் துருப்பிடிப்பு: பாலத்தின் கேபிள்கள் துருப்பிடித்திருந்தன. அதன் நங்கூரங்கள் உடைந்திருந்தன. மேலும் கேபிள்களை நங்கூரங்களுடன் இணைக்கும் போல்ட்கள் கூட தளர்வாக இருந்தன என்று தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாலத்தின் மீது ஒப்பந்ததாரரால் போடப்பட்ட புதிய, கனமானதரையின் சுமையை பழையகேபிள்களால் தாங்க முடியவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓரிவா நியமித்திருந்த பாதுகாவலர்களும், டிக்கெட் தருவோரும் கூட்டத்தை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லாத தினக்கூலி தொழிலாளர்கள். பாலத்தின் பாதுகாப்புக்கு ஓரிவா நிறுவனமே பொறுப்பு.ஆனால் விபத்து ஏற்பட்டால் மக்களைக் காப்பாற்ற அவர்கள் உயிர் காக்கும் சாதனங்களோ அல்லது படகுகளோ வைத்திருக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.