சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களாக குளிர் காற்று வீசி வரும் நிலையில், அதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இன்று (நவ.23) காலை லேசான வெயில் அடித்தாலும் கடந்த 2 நாட்களாக குளிர்ந்த காற்று வீசிவருகிறது. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த விளக்கத்தில், “வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் கரையை நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு வட திசையில் இருந்து தரை காற்று வீசியது. குறிப்பாக மணிக்கு 40 கி.மீ வேகம் வரையில் காற்று வீசியது. இதன் காரணமாக வெப்பநிலை இயல்பைவிட குறைந்தது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் வானிலை ஆய்வு நிலையங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி அதிகபட்ச வெப்பநிலை 23°C ஆக குறைந்தது. குறைந்தபட்ச வெப்பநிலையும் 5°C வரை இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது.
மேக குவியல்கள், மேக மூட்டங்கள் இல்லாத காரணங்களால் பூமிக்கு வந்து திரும்பும் ரேடியேஷன் கதிர்கள் அதிகளவில் வெளியேறியுள்ளன. வட திசை காற்று, அதிக வேகமான தரைக்காற்று, அதிகளவில் பூமியில் இருந்து திரும்பிய ரேடியேஷன் கதிர்கள், குறைந்த அளவிலான வெப்பநிலை உள்ளிட்டவை காரணமாகத் தான் சென்னையில் தட்பவெப்பம் குறைந்து மிகவும் குளிர்ந்த நிலை உணரப்பட்டது. அடுத்த இரண்டு தினங்களுக்குள் இயல்பான தட்பவெப்பநிலை திரும்பும்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.