ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (22-ம் தேதி) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (23-ம் தேதி) மற்றும் நாளை (24-ம் தேதி) வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 25-ம் தேதி மற்றும் 26-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.