மதுரை மாவட்டத்தை அடித்த அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 477 ஏக்கர் நிலப்பரப்பை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலப்பரப்பு தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளம் என்பதை குறிப்பிடத்தக்கது. ஆரிட்டாபட்டி கிராமத்தை சுற்றி 7 சிறு குன்றுகளை தொடர்ச்சியாக கொண்ட தனித்துவமான நிலப்பகுதி அமைந்துள்ளது.
இந்த நிலப்பரப்பில் 72 ஏரிகளும், 200 இயற்கை நீர் ஊற்று குளங்களும், மூன்று தடுப்பணைகளும் அமைந்துள்ளது. அனைக்கொண்டான் ஏரி பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மலைக்குன்று பகுதிகளில் 250 வகை பறவையினங்கள் உள்ளது. மேலும் இரும்பு திண்ணிகள், மலைப்பாம்புகள், அரிய வகை தேவாங்குகள் இங்கு காணப்படுகிறது.
இந்த குன்று பகுதியில் சமண சிற்பங்கள், சமணபடுகைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், சுமார் 2200 ஆண்டுகள் முந்தைய பழமையான குடைவரை கோவில்கள் காணப்படுகின்றன. அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கிராம ஊராட்சிகள், மாநில தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு கனிம நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஆலோசனைக்கு பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை நேற்று முன்தினம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன் பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தவும் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தை பாதுகாக்க உதவும் என வனத்துறை தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.