கோபால்பட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையானது கொடைக்கானல் மற்றும் ஆடலூர், தாண்டிக்குடி, பன்றிமலை, சிறுமலை, நத்தம், மலையூர், சின்னமலையூர், பெரியமலையூர், கரந்த மலையூர் என பல மலை கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த மலை கிராமங்களில் குதிரைகள் மூலம் விளை பயிர்களை தூக்கி வருவதும், விசேஷ நாட்களில் ஊர்வலங்களுக்கு குதிரைகளை அழைத்து செல்வதும் என ஏழைகளின் வருமானத்திற்கு உற்ற துணைவனாக இருந்து வருகிறது.
தற்போது ஊட்டியில் குதிரையிலிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய கிளாண்டர்ஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1000 குதிரைகளுக்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக சிறப்பு குதிரைகள் நல முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது அதன்படி நேற்று கோபால்பட்டியில் நடந்த முகாமிற்கு கால்நடை உதவி மருத்துவர் முருகானந்தம் தலைமை வகிக்க, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மாவட்ட உதவி இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
முகாமில் குதிரைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய கிளாண்டர்ஸ் நோய் கண்டறிவதற்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இந்த ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் குதிரைகளுக்கு ஏற்படும் தோல் நோய், சத்து குறைபாடு, சினை ஆய்வு உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 20க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.