சென்னை: பாஜகவில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிமுறைகளை யார் மீறினாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக நிர்வாகி சூர்யா சிவா ஆடியோ விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திமுகவினரைப் போல பெண்கள் குறித்து பொதுவெளியில் ஆபாசமாக பேசவில்லை. இது தனிப்பட்ட உரையாடல்தான். என்றாலும்கூட, கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை சூர்யா சிவா, டெய்சி சரண் உள்பட யார் மீறி இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக பேராசிரியர் கனகசபாபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பாஜக விசாரணைக்குழுவினர் திருப்பூரில் நாளை விசாரணை நடத்துகின்றனர். இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை எங்களிடம் சமர்ப்பிப்பார்கள். என்னைப் பொருத்தவரை நான் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன். யார் தவறு செய்திருந்தாலும், நான் விடப்போவது கிடையாது. நாளை மாலைக்குள் விசாரணைக்குழு அறிக்கையை என்னிடம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.
காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து நீக்கியது தொடர்பான கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடரும். இன்னும் ஒரு பத்து நாட்கள் பொறுத்திருங்கள். ஒழுக்கம் சார்ந்த விவகாரத்தில் கட்சியின் லட்சுமண ரேகையை யார் தாண்டுகிறார்களோ அவர்கள் யாராக இருந்தாலும் நான் விடப்போவது கிடையாது. இது ஆரம்பம்தான்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனாது. இது குறித்து விசாரணை நடத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.