ஊழல் எதிர்ப்பு உத்தேச சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் இலஞ்ச, ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழு  

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு குறித்து நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (21) கவனம் செலுத்தியது.

ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (21) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடியைத் தடுப்பதற்கு உரிய நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கி அதற்குத் தேவையான அதிகாரத்தை வழங்கும் பொறிமுறையை உருவாக்கத் தவறியமையாலேயே, நாட்டில் இடம்பெறுகின்ற அனைத்து இலஞ்ச, ஊழல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுக்களும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மீது சுமத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குழு முன்னிலையில் விளக்கமளித்தார். இந்த சட்டவரைபில் முன்மொழியப்பட்டுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடியதாக இருப்பதுடன், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு தடவை ஆணைக்குழு தனது முன்னேற்றம் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக நீதி, தடயவியல் கணக்காய்வு, பொறியியல், சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர சேவைகள், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் 20 வருடத்துக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டவர்களை நியமிப்பதற்கும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது. ஆணையாளர்கள் அரசியலமைப்புப் பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்கள். அத்துடன், இந்த ஆணைக்குழுவுக்கான நிதி ஒதுக்கீடு என்பன நேரடியாகப் பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக சட்டத்தரணி ஜயமான்ன குறிப்பிட்டார்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அது தொடர்பான விடயங்களைக் கையாழ்வதற்கும் தனியானதொரு இயக்குனரகமொன்றை அமைப்பதற்கும் இந்த வரைபில் முன்மொழியப்பட்டிருப்பதுடன், அரசாங்கத் துறையில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளுக்கு அப்பால் ஊழல், இலஞ்சம் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படும் துறைகளில் உள்ளவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குவிதியை வெளியிட முடியும்.  அரசாங்கத்தின் முக்கியமான திணைக்களங்கள் இந்த அலுவலகத்துடன் ஒன்லைன் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விசாரணைகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத் துறையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் மாத்திரமன்றி தனியார் துறையில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகள் மற்றும் விளையாட்டுத் துறையில் இடம்பெறுகின்ற இலஞ்ச, ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிரான கடுமையான தண்டனைகள் குறித்தும் இந்தச் சட்டமூலத்தில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

உத்தேச சட்டமூலம் தொடர்பில் ஜனநாயக ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தி உரிய திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

 இதேவேளை, குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் பற்றியும் இக்குழுவில் அமைச்சர் விளக்கமளித்தார். முறையான நடவடிக்கையின் கீழ் சாதாரண வாடகை மற்றும் வெளியேற்றும் வழக்கு நடவடிக்கைகளின் போது ஏற்படுகின்ற சட்ட தாமதத்தைக் கட்டுப்படுத்தி குறுகிய காலத்திற்குள் குத்தகை கொடையாளருக்கு நிவாரணம் வழங்குவது இச்சட்டமூலத்தின் நோக்கம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குத்தகை கால எல்லையைத் தாண்டி குத்தகை வளவுகளில் தங்கியிருக்கும் குத்தகை குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கு முறையான நடவடிக்கையின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மேற்படி வளவுகள் வாடகை சட்டத்தின் கீழ் நிர்வாகிக்கப்படுகின்றனவா இல்லையா என்பதைக் கவனத்தில் கொள்ளாது வழக்குகளை நிறைவுசெய்ய பல வருடங்கள் செல்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் குத்தகை கால எல்லையின் இறுதியில் குத்தகைக்குப் பெற்றுள்ளவர் குறித்த வளவிலிருந்து வெளியேறுவதை நிராகரித்துள்ள போதிலும், யாராயினுமொரு குத்தகை கொடையாளி ஆதனத்தைக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உத்தேச சட்டத்தின் கீழ் உறுதியளிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2022 ஒக்டோபர் 12ஆம் திகதிய 2301/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளையும் இங்கு ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சாமர சம்பத் தசநாயக, கௌரவ காதர் மஸ்தான், கௌரவ டி.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ அநுர பிரியதர்ஷனயாப்பா, கௌரவ சந்திம வீரக்கொடி, கௌரவ ஏ.எம்.எம்.அதாவுல்லா, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ டி.வீரசிங்ஹ, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ எம்.எஸ்.தௌபீக், கௌரவ கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர். பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, நீதி அமைச்சின் அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் சமூகமளித்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.