கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது வயது 45 இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் தீ மளமளவென பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.
இது பற்றி கல்லாவி போலீசாருக்கும், ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். கோழிப்பண்ணையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 3700 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன. கோழிப்பண்ணையில் தரைதளத்தில் தேங்காய் நார்கள் போடப்பட்டதால் தீ வேகமாக பரவியுள்ளது. முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு கோழிகுஞ்சுகள் இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.