“ `அன்புள்ள ரஜினிகாந்த்' எனக்கு ஸ்பெஷலான படம்" : `எவர்கிரீன் நாயகி' மீனா

தமிழ்க் குடும்பங்களின் தலைமகளாக விளங்குகிற அவள் விகடன் இதழ் சார்பில், `அவள் விருதுகள் 2021’ நிகழ்வு, சென்னையில் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. மருத்துவம், விளையாட்டு, இலக்கியம், சமூகச் செயல்பாடு, கல்வி, ஆன்மிகம் என பல்துறைகளில், தம் செயற்கரிய செய்கையால் சாதித்த பெண்களைப் பெருமிதப்படுத்தும் இந்த நிகழ்வு, 5-ம் ஆண்டாக அரங்கேறியது. இது, அவள் விகடனுக்கு வெள்ளி விழா ஆண்டு என்பது கூடுதல் சிறப்பு.

திரைத்துறையில் நீண்டகாலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது சவாலானது. இந்நிலையில் 80-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, தற்போது சின்னத்திரையிலும் பங்காற்றிக் கொண்டிருக்கிறார். தனது திரை வாழ்க்கையில் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் மீனாவுக்கு, அவள் விருதுகள் நிகழ்வில் `எவர்கிரீன் நாயகி’ விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை நடிகை அம்பிகாவும், திரைக்கதை மன்னனும், இயக்குநருமான கே.பாக்யராஜும் இணைந்து வழங்கினர்.

“மீனா மூணு படத்துல என் மகளா நடிச்சிருக்கா. கணக்கு சரியாப்பா” என்று விளையாட்டாகக் கேட்டார் அம்பிகா.

“பத்மா சுப்ரமண்யம், வாணி ஜெயராம் மாதிரியான பெரிய லெஜெண்ட்ஸ் விருது வாங்கின மேடையில் நானும் இந்த விருதை வாங்குறது பெருமையா இருக்கு. சினிமாவுல என்னோட 40 ஆண்டுகள் எப்படிப் போச்சுன்னே தெரியலை. அடுத்து அடுத்துன்னு ஓடிகிட்டிருந்ததால, கடந்து வந்தததைத் திரும்பிப் பார்க்கலை” என்றவர், தன் கணவர் மறைவுக்குப் பிறகான நாள்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். “இந்த இடைப்பட்ட நாள்கள்ல நான் எந்த நிகழ்ச்சிக்கும் போகலை… அதிகமா யார்கிட்டயும் பேசாம இருந்தேன். இப்ப நைஸ் டு பி பேக்” என்றார்.

அடுத்ததாக, திரை ஆளுமைகளுடன் மீனா இருக்கும் புகைப்படங்கள் திரையிடப்படவே, அவர்கள் குறித்த அபிமானத்தைப் பகிர்ந்துகொண்டார்…

சிவாஜி – என்னை அறிமுகப்படுத்தியவர் நடிகர் திலகம்தான். அப்படியொரு ஆளுமையால நான் கண்டெடுக்கப் பட்டேன்ங்குறதை நம்பவே முடியலை.

ரஜினி – `அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்துல நடிச்சபோது, அவரோட விளையாடுறதும், பேசுறதுமாவே இருப்பேன். ரஜினி சார் எப்படிப் பேசுவாரு, பழகுவாருன்னு எங்க ஸ்கூல்ல எல்லோரும் என்னைக் கேட்பாங்க. `அன்புள்ள ரஜினிகாந்த்’ எப்பவும் எனக்கு ஸ்பெஷலான படம்.

கமல் – இவர் ஒரு என்சைக்ளோபீடியா. எல்லாத்தைப் பத்தியும் தெரிஞ்சு வெச்சிருப்பார். சினிமாவைத் தாண்டியும் இவர்கிட்ட நிறைய பேசலாம்.

இளையராஜா – நான் இவரோட பெரிய ரசிகை. `என் ராசாவின் மனசிலே’ படத்துல வர்ற `குயில் பாட்டு’ங்குற என்னோட முதல் ஹிட் சாங்கை கொடுத்தவர். மழை வர நேரத்தில் இவர் பாடல்களைக் கேட்க ரொம்ப பிடிக்கும்.

ஸ்ரீதேவி – இவங்ககூட நிறைய படங்கள் பண்ணியிருக்கேன். மும்பையில மேக்கப் ஐட்டம்ஸ் எல்லாம் எங்க வாங்கலாம்னு சொல்வாங்க. அவங்களைப் பார்த்துப் பார்த்து ரசிச்சிருக்கேன். `ஜான்வி உன்னை மாதிரி வருவா’னு சொன்னாங்க.

கலா மாஸ்டர் – இவங்களை டான்ஸ் மாஸ்டரா தெரியும். நிறைய படம், ஷோ பண்ணியிருக்கோம். வெரி போல்டு வுமன். கொரியோகிராஃபி இண்டஸ்ரியவே ஆட்டி வெச்சவங்க. 30 ஆண்டுக்காலப் பழக்கம் மாஸ்டர்லேருந்து சேச்சின்னு வந்துடுச்சு. அவங்களைப் பத்தி சொல்லணும்னா நிறைய உண்மையைச் சொல்ல வேண்டியிருக்குமே…” என்ற மென்சிரிப்புடன் மீனா சொல்ல, தீபக், “இதோ வருவாங்க… நேர்லயே சொல்லுங்க” என்றதும் சற்றே அதிர்ச்சியாக, “எங்க” என்று அரங்கில் அவர் கண்கள் அலைபாய, கலா மாஸ்டர் சர்ப்ரைஸாக மேடைக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

“நாங்க பண்ண அட்டகாசத்தையெல்லாம் கேட்டா பயங்கரமாக இருக்கும். மழை வந்தா போதும் காரை ஓட்டிக்கிட்டு கிளம்பிடுவோம். நான், மீனா குடும்பத்தோடும் ரொம்ப நெருக்கம்” என நெகிழ்ந்தார் கலா மாஸ்டர்.

“அடுத்து உங்க பொண்ணு வரப்போறாங்க” என்றதும் மீனாவுக்கு செம ஷாக். நைனிகாவா… என்கிற எதிர்பார்ப்போடு அவர் தேடுகையில் `அவ்வை சண்முகி’யில் மீனாவுக்கு மகளாக நடித்த ஆனி மேடையேறினார். ஒரு கணம் திகைப்போடு பார்த்தவர் “காளைமாடு” என `அவ்வை சண்முகி’ வசனத்தைச் சொல்லி ஆனியைத் தழுவிக் கொண்டார்.

நைனிகாவும், குழந்தை மீனாவும் ஒன்றாக இருக்கும்படியான ஓவியத்தை விகடன் சார்பில் பரிசளித்தது அந்த மேடையின் மற்றுமோர் அழகிய தருணம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.