`நான் கடித்துவிடுவேன் என குழந்தைகள் பயப்படுகிறார்கள்'; அசாதாரண முடி வளர்ச்சிக்குள்ளானவரின் சோகம்!

பிறக்கும் போது எவ்வித உடல் நல கோளாறுகள் இல்லாதபோதும், வளர்ந்த பின் மிகப்பெரிய சிக்கல்களைச் சிலர் எதிர்கொள்கின்றனர். அப்படி தன்னுடைய 6 வயது முதல், பதின்ம வயது வரை மாணவர் ஒருவர் விநோதமான பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார்.

பொதுவாகவே முடியானது உடலின் சில இடங்களில் மட்டும் வளரும். ஆனால் அதுவே உடல் முழுதும் கட்டுக்கடங்காமல் வளர்ந்தால், எப்படி இருக்கும்? இப்படியொரு விநோதமான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது லலித் படிதார் என்ற 12 -ம் வகுப்பு மாணவன்.

`Werewolf syndrome’ என்ற அரியவகை நிலையால், இவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய நோயால் ஒருவர் பாதிக்கப்படும்பட்சத்தில், அவரின் உடல் முழுதும் அசாதாரணமான முறையில் அதிகப்படியான முடி வளரும். இந்நோய் ஆண், பெண் இருவரையுமே பாதிக்கலாம். இடைக்காலத்தில் வாழ்ந்த மக்களில் 50 நபர்கள் மட்டுமே இந்த அரிய நிலையால் பாதிக்கப்பட்டார்கள் என்று நம்பப்படுகிறது.

லலித்தின் உடல் முழுதும் முடியானது அதிகப்படியாக வளர்ந்துள்ளது. அவருடன் படிக்கும் மாணவர்கள் அவரை `குரங்கு பையன்’ என்றே அழைக்கின்றனர். அதோடு எங்கே தங்களைக் கடித்து விடுவானோ என்று அச்சப்படுகின்றனர். 

இது குறித்து லலித் கூறுகையில், “நான் மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய அப்பா ஒரு விவசாயி. நான் இப்போது 12 -ம் வகுப்பு படித்து வருகிறேன். அதே நேரத்தில் என்னுடைய தந்தையின் விவசாய வேலைகளிலும் உதவி வருகிறேன்.

நான் பிறக்கையில், மருத்துவர் என்னை ஷேவ் செய்து கொடுத்தார் என என்னுடைய பெற்றோர்  என்னிடம் கூறினார்கள். ஆனால் என்னுடைய 6 முதல் 7 வயது வரை பெரிய வித்தியாசம் ஏதும் எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகு கவனித்தபோதுதான், என்னுடைய உடல் முழுதும் முடி வளர்வது தெரிந்தது. என்னுடைய குடும்பத்தில் இதற்கு முன்பு இதுபோன்ற பாதிப்புகள் இருந்ததில்லை. எனக்கு மட்டும் தான் இந்த நோய் உள்ளது.

சிறிய குழந்தைகள் என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். சிறுவயதாக இருந்தபோது எனக்கு இது பெரிதாகத் தெரியவில்லை, அதுவே நான் வளர்கையில், மற்றவர்களைப் போல நான் இல்லை, என்னுடைய உடல் முழுதும் முடி இருக்கிறது என்பதை அறிந்தேன். விலங்குகளைப் போல நான் கடித்துவிடுவேன் எனக் குழந்தைகள் என்னைக் கண்டு பயப்படுகிறார்கள்.

இந்த நிலைக்கு எந்தச் சிகிச்சையும் இல்லை. முடி நீளமாக இருப்பதை உணர்ந்தால், அதை ட்ரிம் மட்டும் செய்வேன், அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். 

நான் சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபட்டவன். நான் தனித்துவமானவன். என்னுடைய பயணத்தில் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், முக்கியமாக நான் மில்லியனில் ஒருவன் என்பதை.. வாழ்வை விடாமல் இறுதிவரை மகிழ்ச்சியாக வாழவேண்டும். 

நான் வித்தியாசமாக இருக்கிறேன்; பெரும்பாலான நேரங்களில் நம்முடைய வேறுபாடுகள் தான் நம்முடைய மிகப்பெரிய பலம். நான் நானாக இருப்பதில் பெருமையாக உள்ளேன்’’ எனத் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.