இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ௨௬௮ஆக உயர்ந்துள்ளது. மேலும், ௧௫௧ பேரை காணவில்லை. இதற்கிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள சியான்சுரில் நேற்றுமுன்தினம் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பள்ளி, மருத்துவமனை மற்றும் ஏராளமான வீடுகள் இடிந்தன.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, ௨௬௮ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர, ௧௫௧ பேரை காணவில்லை. கட்டடங்கள் இடிந்த விழுந்ததில் சிக்கி காயமடைந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ௩௦௦க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலநடுக்கத்தில், சியான்சுர் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த பெரும்பாலான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டட இடிப்பாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட, மின்சாரம், தொலைத் தொடர்பு வசதிகள் நேற்று படிப்படியாக சரி செய்யப்பட்டன.
இதற்கிடையே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர், தங்களுடைய உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்ததால், உயிர் தப்பிய மக்கள், சாலைகளில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு ஜகார்த்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து உணவு, குடிநீர், மருந்து போன்றவை வரவழைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டன.
அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ, சியான்சுர் நகரில் நடக்கும் மீட்புப் பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டார். வீடுகளை இழந்தோருக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement