குழந்தை விற்பனை வழக்கில், மதபோதகர் உட்பட இருவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 26; ஓட்டுனர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை காதலித்துள்ளார்.
கடந்த 2020ல் சென்னை வந்து, தி.நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்துள்ளனர்.
அப்போது சந்திரசேகர், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பலமுறை அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் கர்ப்பமான அப்பெண்ணுக்கு, கடந்த பிப்ரவரியில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையை வளர்க்க முடியாததால், சந்திரசேகர் விற்க முடிவு செய்துள்ளார்.
அப்போது, திருநெல்வேலியைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகரான பிரான்சிஸ், 41, மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி, 46, ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவர்கள் வாயிலாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியிடம், 2 லட்சம் ரூபாய்க்கு சந்திரசேகர் குழந்தையை விற்றுள்ளார்.
இந்நிலையில், சந்திரசேகரிடம் குழந்தை குறித்து கேட்டு, அவரது காதலி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், அப்பெண்ணை விட்டுவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியான அப்பெண், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சந்திரசேகரன் தன்னை ஏமாற்றியதாகவும், குழந்தையை காணவில்லை என்றும், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீதிமன்றத்திலும், கடந்த 10ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சந்திரசேகரை கடந்த வாரம், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த மதபோதகர் பிரான்சிஸ் மற்றும் தேன்மோழி ஆகியோரை, திருநெல்வேலியில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்களை, சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்