டி.என். சேஷனைப் போல் திறமையானவர் தலைமை தேர்தல் ஆணையராக வர வேண்டும் ஆனால் அது எப்போதாவது தான் நடக்கிறது என்று தேர்தல் சீர்திருத்தம் குறித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்ச் தெரிவித்தது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அவருக்கு உதவியாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் மீது அரசியலமைப்பு மகத்தான அதிகாரங்களை வழங்கியுள்ளது, மேலும் அந்த பதவிக்கு “வலுவான குணம் கொண்ட ஒருவர்” நியமிக்கப்படுவது முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையில் சீர்திருத்தம் செய்யக் கோரிய மனுவை விசாரித்து வந்தது.
1990 முதல் 1996 வரை தேர்தல் குழு தலைவராக முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த மறைந்த டி என் சேஷன் போன்ற ஒரு தலைமை தேர்தல் ஆணையர் தேவை என்றும் நீதிமன்றம் நேற்று சுட்டிக்காட்டியது.
“திறமையான மனிதரை” தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், ஆனால் அரசு இதில் வெறும் பேச்சை தவிர செயலில் எதையும் காட்டவில்லை” என்று நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கருத்து தெரிவித்தது.
தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியலமைப்பு அமைப்புகளுக்கான நியமனங்களுக்கு கொலீஜியம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
“ஜனநாயகம் என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு. அதுகுறித்து எந்த விவாதமும் இல்லை. நாடாளுமன்றத்தில் இதைச் செய்யச் சொல்லவும் முடியாது, அதை நீதிமன்றம் செய்யது.
1990-ல் இருந்து எழுப்பப்பட்டு வரும் பிரச்சினைக்கு ஏதாவது செய்ய விரும்புகிறோம்” என்று நீதிமன்றம் கூறியது. “நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதை மாற்றவேண்டிய கடமை உள்ளது” என்று அது கூறியது.