அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் வால்மார்ட் டிபார்ட்மென்ட் ஸ்டோர் (Walmart department store) இருக்கிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். துப்பாகிச்சூடு சத்தம் கேட்டதும் பொதுமக்கள் அங்குமிங்குமாக ஓடத் தொடங்கினர். பயங்கர தாக்குதல் நோக்கத்துடன் உள்ளே நுழைந்த அந்த நபர், சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், பலர் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், “இந்த துப்பாக்கிச்சூடு ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் இந்தத் தாக்குதலில் இறந்துவிட்டார். 10 பேர் வரை இந்த தாக்குதலில் மரணித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இது தொடர்பாக முழுமையான தகவல்கள் கிடைத்ததும், தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
வர்ஜீனியா மாகாணத்தின் செனேட்டர் லூயிஸ் லூகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வால்மார்ட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடந்து, நான் மிகவும் மனம் உடைந்திருக்கிறேன். இந்த ஆயுத வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் வரை நான் ஓயமாட்டேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.