திமுகவில் எம்.எல்.ஏவாக இருந்தவர் டாக்டர் சரவணன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரையில் இவர் போட்டியிட எண்ணியிருந்த தொகுதி திமுகவின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். பிறகு பாஜக சார்பாக களமிறங்கி தோல்வியடைந்தார். இருப்பினும் பாஜகவில் தொடர்ந்து பயணப்பட்டுவந்தார் டாக்டர் சரவணன். இப்படிப்பட்ட சூழலில் சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தச் சம்பவம் நடந்த அன்று நள்ளிரவே அமைச்சர் பிடிஆரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார் டாக்டர் சரவணன்.
பிடிஆரை நேரில் சந்தித்ததை அடுத்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார் சரவணன். இதனால் தனது அரசியல் வாழ்க்கையில் அடுத்தது என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருந்த அவருக்கு தனது மகன் திருமணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதனை பயன்படுத்தி கட்சி பேரம் பார்க்காமல் அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்தார்.
அதன்படி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன், அதிமுகவைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களில் இருந்து நடிகர், நடிகைகள்வரை கலந்துகொண்டனர். குறிப்பாக திருமணத்தை பிடிஆர் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.
இதனால் திமுகவில் டாக்டர் சரவணன் மீண்டும் ஐக்கியமாகலாம் என கணிக்கப்பட்டது. மேலும் அதற்கான நடவடிக்கையை அமைச்சர் மூலம் சரவணன் செய்துவருகிறார் எனவும் கூறப்பட்டது. அதேசமயம் சரவணனை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர தலைவர் ஸ்டாலினிடமிருந்து எந்த சிக்னலும் கிடைக்காமல் இருந்தது. இதற்கிடையே தன் மகன் திருமணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் சரவணனின் மகன் திருமணத்திற்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து மடல் அனுப்பியிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. அவர் அனுப்பியிருக்கும் வாழ்த்து மடலில், “அன்புடையீர் வணக்கம்! தங்களின் மணவிழா அழைப்பிதழ் பெற்று மனமகிழ்ச்சி அடைந்தேன். ‘இயல்பிலான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வருள் எல்லாம் தலை’ என்று அய்யன் திருவள்ளுவர் வகுந்தளித்திருக்கும் இல்வாழ்வின் இலக்கணம் உணர்ந்து.
தமிழும் அமுதம் போல், பெரியாரும் பகுத்தறிவும் போல், அண்ணாவும் கற்றலும் போல், கலைஞரும் கழகமும் போல், மணமக்கள் பல்லாண்டு காலம் பலரும் போற்றும் இணையராக இல்லறம் காண விழைகிறேன். அனைத்து செல்வங்களும் பெற்று வீட்டுக்கு விளக்காகி, நாட்டுக்கு ஒளி ஏற்றி வாழ்வாங்கு வாழ்ந்திட எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது இதுதொடர்பான புகைப்படம் வைரலாகியுள்ளது. மேலும் திருமண அழைப்பிதழ் மூலம் கட்சியில் மீண்டும் இணைய தூது விட்ட சரவணனுக்கு வாழ்த்து மடல் மூலம் ஸ்டாலின் வரவேற்பு அளித்திருக்கிறார். விரைவில் திமுகவில் சரவணன் இணையும் படலம் நடக்கும் என்கின்றனர் மதுரை மாவட்ட திமுகவினர்.