“வாலி ஐயா சொன்ன மாதிரி எனக்கு விருது கிடைச்சது!"- ஶ்ரீகாந்த் தேவா பெருமிதம்

‘தேனிசைத் தென்றல்’ தேவா கானா பாடல்கள் மூலம் நம்மை கவர்ந்திழுத்தார் என்றால் அவரது மகன் ஶ்ரீகாந்த்தேவா வேற லெவல்! அதிரடியான குத்துப்பாடல்கள் மட்டுமில்லாமல் எவர்க்ரீன் மெலடிகளையும் கொடுத்தவர். உதயநிதியின் ‘கலகத் தலைவன்’ மூலம் தனது இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் அவர்.

“உங்களது முதல் படத்துக்கு இசையமைத்த அனுபவம் நினைவில் இருக்கிறதா?”

ஶ்ரீகாந்த்தேவா

”அதெப்படி மறக்க முடியும்! இன்னிக்கு வரைக்குமே அப்பா என்னை குழந்தை மாதிரிதான் பார்த்துப்பார். நான் ரோட்டுக்கடைக்கு நடந்து போனால் கூட, ‘பார்த்துப் போயிட்டு வாப்பா’னு வாஞ்சையோடு சொல்லுவார். ஆர்.பாண்டியராஜன் சார் எங்க அப்பாகிட்ட, ‘உங்க பையனை என் அடுத்த படம் ‘டபுள்ஸ்’ல மியூசிக் டைரக்டர் ஆக்குறேன்’னு சொன்னார். அதை அப்பாவால நம்ப முடியல. அந்த வயசில எனக்கு மியூசிக் தெரியும். நல்லா கீபோர்டு வாசிப்பேன். அப்பா என்கிட்ட நோட்ஸ் கொடுத்திடுவார். அதை அழகா வாசிச்சிடுவேன். ஆனா, கம்போஸிங்கிற்கென ஒரு நாலேஜ் இருக்கு. அதை அப்ப அவ்ளோவா கத்துக்கல. ஆனாலும், பாண்டியராஜன் சார் என்மீது நம்பிக்கை வச்சார். முதல் படத்துல முதல் பாடலே வைரமுத்து சார் தான் எழுதினார். தேனிலவு பாடல் அது. மறக்க முடியாத அனுபவம்.”

“வாலியுடன் கம்போஸிங்கில் இருந்த அனுபவம் சொல்லுங்களேன்…”

கவிஞர் வாலி

”அப்பா, வாலி ஐயாவுக்கு மெட்டு அனுப்பும்போது ட்யூனை கேசட்டுல பதிவு பண்ணி அனுப்புவார். அப்படி அவர் அனுப்பறப்ப அப்பா அவர் கைகளைக் கூப்பியடி, ‘அண்ணே வணக்கங்கண்னே நான் பல்லவி பாடப்போறேன்ணே… ஒரு கானா பாடல்ணே’னு பணிவுடன் பதிவு செய்து வாலி ஐயாவுக்கு அனுப்பி வைப்பார். அதையெல்லாம் நான் பார்த்திருக்கேன். எனக்கு வாலி ஐயா கூட பணிபுரியற வாய்ப்பு அமைஞ்சது. நானும் அப்பா மாதிரியே பணிவா ‘அண்ணே வணக்கங்கண்ணே’னு சொல்லிட்டு இது ஒரு அம்மா சென்டிமென்ட் பாடல்னு சொல்லி ‘எம்.குமரன் s/o மகாலட்சுமி’க்கான மெட்டைப் பதிவு செய்து கேசட்டை அவருக்கு அனுப்பிட்டேன்.

வழக்கமா, அப்பா ஸ்டூடியோவுக்கு ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிப் போய்டுவார். நான் 9.30 மணிக்கு மேலதான் ஸ்டூடியோவுக்கு வருவேன். ஆனா, அன்னிக்கு அப்பா என்னை எதிர்பார்த்துக்கிட்டு இருந்தார். என்கிட்ட அவர் ‘வாலி ஐயாவுக்கு கேசட் கொடுத்திருந்தியாப்பா?”ன்னு கேட்டுட்டு ‘உன்னை ரொம்ப பாராட்டினார்ப்பா’ ன்னு சொல்லி சந்தோஷப்பட்டார். பிரம்ம முகூர்த்தம்ல தான் வாலி ஐயா பாடல்கள் எழுதுவார். அவர் அதிகாலையில் நான் அனுப்பின கேசட்டைக் கேட்டுட்டு அப்பாவுக்கு போன் செய்திருக்கார்.

‘தேவா, உன் பையன் உன் குரல்லேயே நீ சொல்ற மாதிரி பேசி அனுப்பியிருக்கான். அவன் ரொம்ப நல்லா வருவான்பா..’ ன்னு சொல்லி ஆசீர்வதிச்சிருக்கார். அதை அப்பா பூரிப்பா சொல்லி மகிழ்ந்தாங்க. உடனே நான் வாலி ஐயாவை சந்திக்கப் போனேன். ‘இந்த பாடலுக்கு நீ அவார்டு வாங்குவ’ன்னு அவர் சொன்ன வாக்கு பலிச்சிடுச்சு. அந்த வருஷத்துக்கான தமிழக அரசு விருது எனக்கு கிடைச்சது. ‘நீயே நீயே..’ பாடல் என் வாழ்க்கையை திருப்பிப் போட்ட பாடலாகிடுச்சு. ”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.