புதிய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில், ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பர். இவர்கள் பணி மூப்பின் அடிப்படையில் அந்தந்த பதவிகளில் நியமிக்கப்படுவர். அந்தவகையில், இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக 1985ம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயலை நியமித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் பணியில் இருக்கும் நிலையில் புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் கடந்த 21ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அருண் கோயல் மத்திய அரசு செயலாளராக பணிபுரிந்து உள்ளார். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னர், அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பார். 2027ம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து அருண் கோயல் ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் சீர்திருத்தங்களை கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞரிடம் அரசியல் சாசன அமர்வு ஏராளமான கேள்விகளை முன்வைத்தது. குறிப்பாக, புதிய தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான ஆவனங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அதன்படி, இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போது, புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.
இதையடுத்து, கடந்த மே மாதம் முதல் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கான அறிவிப்பு, நவம்பர் 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கிய பிறகே, நவம்பர் 18ஆம் தேதி வந்துள்ளது. அதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் எனவும் நீதிபதி ஜோசப் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
புதிய தேர்தல் ஆணையர் தொடர்பான ஆவணமும் நவம்பர் 18ஆம் தேதியே அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கூட அதே நாளில் பரிந்துரை செய்துள்ளார் அப்படிப்பட்ட அவசரம் எங்கிருந்து வந்தது? எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பரிசீலிக்கப்பட்ட 4 அதிகாரிகளில் அருண் கோயல்தான் இளையவர் என்பதை மத்திய அரசு தாக்கல் செய்த கோப்பில் இருந்து வாசித்த நீதிபதி ஜோசப், 4 அதிகாரிகளில் இருக்கும் போது, அவசர அவசரமாக மின்னல் வேகத்தில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் மத்திய அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் எப்படி தேர்தல் ஆணையராக நியமிக்கபட்டுள்ளார்? இவ்வளவு நாட்கள் மத்திய அரசு என்ன செய்தது? என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இதுகுறித்தான விளக்கத்தை வருகிற 29ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.