தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, தலைவர் பதவிக்கான போட்டி கட்சியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இது தற்போது உட்கட்சிப்பூசலாகவும் மாறியிருக்கிறது. அதாவது, கடந்த 15-ம் தேதியன்று, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், கட்சியின் பொருளாளரும், எம்.எல்.ஏ-வுமான ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டபோது, அவர்களுக்கும் அழகிரியின் ஆதரவாளர் ரஞ்சன் குமார் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ரூபி மனோகரன், ரஞ்சன் குமார் ஆகிய இருவரையும், நவம்பர் 24-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழுக் குழு கூட்டத்தில் நேரில் ஆஜராகி இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் தருமாறு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் ரூபி மனோகரன் ஆஜராகவில்லை, ரஞ்சன் குமார் மட்டும் நேரில் ஆஜரானார்.
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, “ரூபி மனோகரனை கட்சியின் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்குகிறேன். மேலும் 15 நாள்களுக்குள் ரூபி மனோகரன் விளக்கம் தரவேண்டும். இந்த முடிவெடுப்பதற்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக ரூபி மனோகரனுக்கு, “அடுத்து நடைபெறவிருக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் தாங்கள் தகுந்த ஆதரவாளர்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். அதுவரை தாங்கள் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிக்கிறது” என கே.ஆர்.ராமசாமி கடிதம் அனுப்பியிருக்கிறார்.