தமிழகத்தில் ரேஷன் கடை மூலம் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் நியாய விலையில் பொருட்களை மாதந்தோறும் பெற்றுச் செல்கின்றனர். எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் வெளி மார்க்கெட்டை காட்டிலும் மிக குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அரிசி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ரேஷனில் புகார்
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடைகளில் போலி பில் போடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது வாடிக்கையாளர்கள் வாங்காத பொருட்களுக்கும் சேர்த்து பில் அனுப்பப்படுவதாகவும், ஒரு பொருள்கூட வாங்காதவர்களுக்கும் பொருட்கள் வாங்கியதுபோல் குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாடுகள் எழுந்துள்ளன. இது தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் மேல் அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை எச்சரிக்கை
இந்த புகார்கள் குறித்து தமிழக கூட்டுறவுத்துறை கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொருட்கள் வாங்காதவர்களுக்கு, பொருட்கள் வாங்கியதுபோல் குறுஞ்செய்தி சென்றால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி பில் போடும் ஊழியர்கள், உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த நடவடிக்கையில் சிக்குவார்கள் என கூட்டுறவுத்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தல்
நாட்டிலேயே தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த அளவில் ரேஷன் அரிசி கடத்தலும் அரங்கேறி வருகிறது. தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரேஷன் அரிசிகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தும், இந்த கடத்தலை முழுமையாக கட்டுப்படுத்தமுடியவில்லை. இது குறித்தும் கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.