சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரனை கட்சியிலிருந்து தற்காகலிக நீக்கி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்தவாரம் அக்கட்சியைச் சேர்ந்த இரு குழுவினர் இடையே மோதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரன் மீதும், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவராக இருக்கும் ரஞ்சன்குமார் மீதும் புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, இருதரப்பும் இன்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவராக இருக்கும் கே.ஆர்.ராமசாமி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று நடந்த விசாரணையின்போது, ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். ஆனால் இந்த விசாரணைக்கு, காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஆஜராகவில்லை.
இந்நிலையில் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இதுவரை இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்டத் தலைவர்கள் 63 பேர் சேர்ந்து ஒரு புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்க கோரி, ரூபி மனோகரன் என்னிடம் தொலைபேசி மூலமாகவும் கேட்டார். அதேபோல் கடிதமும் அளித்துள்ளார். ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளோம். அடுத்த ஒழுங்கு நடவடிக்கை கூட்டத்திற்கு அவர் தனது தரப்பு விளக்கத்தை நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.