கனிமொழி வகித்திருந்த தி.மு.க மகளிரணி செயலாளர் பதவி நாகர்கோவிலைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க பாரம்பரியத்தைச் சேர்ந்த டேவிட்சனை 1995-ம் ஆண்டு திருமணம் செய்த கையோடு அக்கட்சியில் உறுப்பினராக இணைந்தார் ஹெலன் டேவிட்சன். சுமார் 20 ஆண்டுகள் இளைஞரணி, வட்ட பிரதிநிதி என பல்வேறு பொறுப்புகளை வகித்த டேவிட்சன், இப்போது தி.மு.க-வில் தொடர்ந்து இயங்கி வருகிறார். ஹெலன் டேவிட்சன் தி.மு.க-வில் சிறு சிறு பொறுப்புகளை வகித்துவந்த நிலையில் 2004-ல் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பதவி அவரை தேடிவந்தது.
2009-ல் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். 2014-ல் எம்.பி பதவிகாலம் முடிவடைந்த பிறகு மகளிர் தொண்டரணி மாநில செயலாளர் பதவி அவரை தேடி வந்தது. இப்போது மாநில மகளிரணி செயலாளர் பதவிக்கு வர கனிமொழி தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆனது மட்டும் காரணம் அல்ல. கனிமொழியுடனான ஹெலன் டேவிட்சனின் நெருங்கிய நட்பும் ஒரு காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
2ஜி வழக்கில் கனிமொழி கைதான நேரத்தில் அப்போது எம்.பி-யாக இருந்த ஹெலன் டேவிட்சனை அழைத்த துரைமுருகன், ‘நீங்கதான் கனிமொழியை கவனிச்சுக்கணும்’னு சொல்லியிருக்கிறார். கனிமொழி சிறையில் இருந்த 7 மாதமும் அவருக்கு உறுதுணையாக ஹெலன் டேவிட்சனும் இருந்தார். சிறையில் இருந்து கனிமொழி கோர்ட்டுக்கு ஆஜராக்க வரும்போது ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை அவருடன் இருந்திருக்கிறார் ஹெலன் டேவிட்சன்.
டெல்லியில் முகாமிட்டிருந்த ராசாத்தி அம்மாளிடம், கருணாநிதி பேசுவதற்காக ஹெலன் டேவிட்சனின் செல்போனில் அழைத்து, அதன் மூலமாகத்தான் பேசியிருக்கிறார். அப்போது ஹெலன் டேவிட்சனுக்கு கனிமொழியுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டில் நடந்த தி.மு.க உள்கட்சி தேர்தலில் மாவட்டச் செயலாளராக 5 பெண்களை நியமிப்பதாக சொல்லப்பட்டது. அதற்காக ஹெலன் டேவிட்சனிடமும் வேட்புமனு தாக்கல் செய்ய தலைமை சொல்லியிருக்கிறது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டதால் மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் பதவி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டது.
2000-வது ஆண்டு ஸ்டாலின் பிறந்த நாளில் ஹெலன் டேவிட்சனும், அவரின் கணவர் டேவிட்சனும் உடல் தானம் செய்து கட்சி தலைமை வரை கவனம் பெற்றனர். இரண்டு மகள்கள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவன் மனைவியாக கட்சிப்பணி செய்துவருகிறார்கள் ஹெலன் டேவிட்சனும், டேவிட்சனும்.
“எம்.பி-யாக இருந்த சமயத்தில் இலங்கை தமிழர்கள் விஷயத்தை கவனிக்க கருணாநிதி வழிகாட்டுதல்படி இலங்கைக்கு சென்றுவந்தார் ஹெலன் டேவிட்சன். பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பாளராக இருந்து கட்சியினர் வெற்றிக்கான உழைத்திருக்கிறார். சீனியாரிட்டி படி பல பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. இப்போது தி.மு.க மகளிரணி செயலாளர் ஆனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்” என்கிறது ஹெலன் டேவிட்சன் தரப்பு.