திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருச்சூர் அருகே சாலக்குடி பகுதியில் கபாலி என்ற காட்டு யானை அடிக்கடி ரோட்டுக்கு வந்து வாகன ஓட்டிகளையும், பயணிகளையும் பயமுறுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன் இந்த யானை 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு சென்ற தனியார் பஸ்சை தாக்க முயன்றது. அந்த யானையிடமிருந்து தப்பிப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைவான அந்த மலைப்பாதையில் மிகவும் சாகசமாக 8 கிமீ பின்னோக்கி ஓட்டிச் சென்றார். 8 கிமீ தூரம் வரை அந்த பஸ்சை விரட்டியபடியே சென்ற கபாலி யானை பின்னர் வனத்திற்குள் சென்றதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதன் பிறகும் சில நாட்கள் கழித்து அதே பாதையில் கபாலி யானை வாகனத்தில் சென்றவர்களை அச்சுறுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் 50 பயணிகளுடன் சாலக்குடியில் இருந்து மலக்கப்பாறை என்ற இடத்திற்கு கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் அம்பலப்பாறை கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கபாலி யானை பஸ்சின் முன்னால் வந்தது. யானையைப் பார்த்ததும் பயந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். திடீரென கபாலி யானை தந்தத்தால் பஸ்சின் முன்புறம் குத்தி தூக்கி மறுபடியும் கீழே போட்டது.
இதனால் பயணிகள் அனைவரும் பயந்து அலறினர். பஸ்சின் முன்னால் நின்றபடி அந்த யானை நீண்ட நேரம் பிளிறிக் கொண்டிருந்தது. வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் பஸ்சில் இருந்த பயணிகளால் இறங்கி ஓடவும் முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் அட்டகாசம் செய்த அந்த கபாலி யானை பின்னர் வனத்திற்குள் சென்று விட்டது. இதன் பிறகு டிரைவர் பஸ்சை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.