‘என்னை கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்கியிருப்பது மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது’ என நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நெல்லை மாவட்டம் களக்காட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கட்சியின் மாநில பொருளாளரும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனை இன்று கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்குவதாக அறிவிப்பு வெளியானது.
இதுகுறித்து நெல்லை மாவட்டம் களக்காட்டில் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரூபி மனோகரன், “சொந்த தொழிலை கூட கட்சிக்காக விட்டுவிட்டு மக்கள் பணி மற்றும் கட்சி பணியை செய்து வருகிறேன். இளங்கோவன், திருநாவுக்கரசர், அழகிரி உள்ளிட்டவர்களுடன் பணி செய்துள்ளேன். இடைநீக்கம் செய்துள்ளதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.” என வருத்தம் தெரிவித்தார்.
கட்சித் தலைவர்களை குறை சொல்ல விரும்பவில்லை என்ற அவர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆட்டை மாட்டை அடிப்பது போல் என்னை நம்பி வந்தவர்களை அடித்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியிலேயே தமிழகத்தில் நம்பர் ஒன்றாக 35 ஆயிரம் பேர் உறுப்பினராக நாங்குநேரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த அவமரியாதை இல்லை. இந்த பகுதி மக்களுக்கு செய்த அவமரியாதை. நாங்குநேரி தொகுதியில் கட்சி உயிரோட்டமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை.” என்றார்.
“ஒரு லட்சம் பனை நடுவதற்கான பணிகள் களக்காட்டில் இருப்பதால்தான் விலக்கு கேட்டு ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு கடிதம் அனுப்பி இருந்தேன். எனது தரப்பு கருத்தை தெரிவிப்பதற்கு பத்து நாட்கள் அவகாசம் கேட்டு இருந்தேன். என்னை கட்சியில் இருந்து இடைக்காலமாக நீக்கியிருப்பது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. கட்சி என் மீது எடுத்தது தவறான முடிவு. நாங்குநேரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.” என்றும் ரூபி மனோகரன் அப்போது தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 15ஆம் தேதியன்று, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், கட்சியின் பொருளாளரும், எம்எல்ஏவுமான ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டபோது, அவர்களுக்கும் அழகிரியின் ஆதரவாளர் ரஞ்சன் குமார் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் பலர் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ரூபி மனோகரன், ரஞ்சன் குமார் ஆகிய இருவரையும், நவம்பர் 24ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் ஒழுங்கு நடவடிக்கை குழுக் குழு கூட்டத்தில் நேரில் ஆஜராகி இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் தருமாறு கடந்த 17ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ரூபி மனோகரன் ஆஜராகவில்லை, ரஞ்சன் குமார் மட்டும் நேரில் ஆஜரானார்.
தொடர்ந்து, அடுத்து நடைபெறவுள்ள கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி தகுந்த ஆதாரங்களோடு விளக்கம் தர வேண்டும். அதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கே.ஆர்.ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.