நெல்லை கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரூபி மனோகரன். அண்மையில் நடந்து முடிந்த காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலில் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட இரு வட்டாரத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்கள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், அவர்களை மாற்றியதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
அதனால் கடந்த 15-ம் தேதி நெல்லையிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் ஏழு பேருந்துகளில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்று மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் நியாயம் கேட்டனர். அப்போது கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல், நெல்லையிலிருந்து சென்றவர்கள்மீது கடுமையாகத் தாக்கியது. இதில் மூவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவசரமாகக் கூடிய மாவட்டத் தலைவர்கள், ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் குறித்து கட்சியின் ஒருங்கு நடவடிக்கைக்குழு தலைவர் ஆர்.ராமசாமி விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்தக் குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதையடுத்து, தனது தொகுதியில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் 10 நாள்கள் அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அதை ஏற்க மறுத்து, ரூபி மனோகரனை இடைநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வருகை தந்திருந்த ரூபி மனோகரன் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக எனது தொகுதிக்கு வந்திருக்கிறேன். நீதிமன்றங்களில்கூட கால அவகாசம் கோரினால் கொடுப்பார்கள். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
என்னிடம் விளக்கம் கேட்காமலே தன்னிச்சையாக முடிவெடுத்து நீக்கம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது என் மனதுக்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. நான் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்திருக்கிறேன். எனது தொகுதியில் கட்சியை வளர்ச்சியடைய வைத்திருக்கிறேன். எம்.எல்.ஏ-வாகவும் கட்சியின் மாநிலப் பொருளாளராகவும் இருக்கும் என்னை மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் நீக்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், இப்போது கே.எஸ்.அழகிரி என பல தலைவர்களுடன் வேலை செய்திருக்கிறேன். என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து தலைமையிடம் முறையிடுவேன். அதற்காக தேவைப்பட்டால் டெல்லிக்குச் செல்வேன்.
கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்கச் சென்ற எனது தொகுதியின் காங்கிரஸ் தொண்டர்களை ஆடு, மாடுகளை அடிப்பது போல அடித்திருக்கிறார்கள். அதற்குக் காரணமான தலைவர்கள், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தாமல் என்னிடம் விளக்கம் கேட்டார்கள். அதையும் நான் சொல்வதற்கு அவகாசம் கொடுக்காமல் நீக்கியிருப்பது வருத்தம் அளிக்கும் செயல். இது எனக்கு அல்ல, எனது தொகுதி மக்களை அவமதிக்கும் செயல்.
இன்னும் மூன்றரை ஆண்டுகள் நான் சட்டமன்ற உறுப்பினராக இதே தொகுதிக்குப் பாடுபடுவேன். முன்பைவிடவும் வேகமாக இந்தத் தொகுதியில் தங்கியிருந்து எனக்கு வாக்களித்த மக்களுக்காகப் பாடுபடுவேன். கட்சியை வளர்க்க வேண்டும் என்கிற எனது ஆசையில் சிலர் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார்கள். இது தவறான நடவடிக்கை. இது குறித்து கட்சித் தலைவர் கார்கேவிடம் முறையிடுவேன். நல்லதே நடக்கும்” என்றார், ரூபி மனோகரன்.