நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் விஸ்வநாத்தை சந்திக்க ஹைதராபாத்திற்கு சென்று அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் நேற்று மதியம் சென்னை திரும்பினார்.
ஹைதராபாத்தில் இருந்து கமல்ஹாசன் சென்னை திரும்பிய நிலையில், நேற்று உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று காலை கமல்ஹாசன் வீடு திரும்பிவிட்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘கமல்ஹாசன் சளி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது குணமாகி வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.