டிராக்டர் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்பீடாக 6 லட்சத்தை எம்எல்ஏ பழனி வழங்கியுள்ளார்.
தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் இருந்து சரளை மண் வெட்டி எடுத்து தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனிக்கு சொந்தமான எஸ்பிஎன் சேம்பர் குவாரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் மணல் ஏற்றி சென்ற காங்கிரஸ் எம் எல் ஏ பழனிக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று கீழ் சுரண்டை பிள்ளையார் கோவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ராஜதுரை என்பவரின் மகன் 4 வயது சிறுவன் மீது டிராக்டர் ஏறி இறங்கியுள்ளது. இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த சுரண்டை போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பெற்றோர்கள், உறவினர்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பார்த்த பிறகு தங்களது மகன் உடலை உடற்கூறு செய்ய அனுமதிப்போம் என தெரிவித்து இருந்தனர்
இந்த நிலையில் தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நேரில் வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் சிறுவன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து அவரது உடலை பார்த்துவிட்டு மாலை அணிவித்துவிட்டு அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் சிறுவனின் குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.