திருச்சி மாவட்ட காட்டூரில் உள்ள அரசு திராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று வானவில் மன்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று மதியத்திற்குள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13,710 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்கப்படும்.
இந்த திட்டம் குறித்து அனைத்து மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் இரா. சுதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் “தமிழக அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை மேம்படுத்த பள்ளிகளில் முதன்முறையாக வானவில் மன்றம் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் சிறந்த நிபுணர்களைக் கொண்ட அறிவியல் செயல்முறை வடிவில் பல்வேறு சோதனைகள் செய்து காண்பித்து மாணவர்களின் கற்றல் மேம்படுத்தப்படும். இந்த சோதனைக்காக அறிவியல் கணித பரிசோதனை செய்வதற்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக 1,200 ரூபாய் ஒதுக்கப்படும்.
பாடத்திட்டத்துடன் தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து மாணவர்கள் கேள்விகள் எழுப்ப ஊக்குவிக்க வேண்டும். வானவில் மன்றத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த ரூ.1.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது