உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து, நாடு முழுவதும் நாளை பந்த் நடத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி, 103-வது அரசியல் சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார்.
இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த அரசியல் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரத்தில், இந்த இடஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்க முடியாது என்றும் மறுத்துவிட்டது.
தொடர்ந்து, கொரோனா தொற்று காரணமாக இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வந்த நிலையில், மனுக்களை விசாரிக்க கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, எஸ்.ரவீந்திர பட், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த அரசியல் சட்ட அமர்வு கடந்த 7-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதன்படி, 40 மனுக்கள் மீது 4 தனித்தனி தீர்ப்புகள் வெளியிடப்பட்டன. இதில் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கினர்.
இந்நிலையில், மாதம் 65,000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதைக் கண்டித்து, நாடு முழுவதும் நாளை (நவ.29-ம் தேதி) பந்த் நடத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, #29thNovBharatBandh என்ற ஹேஸ்டேக் வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது.