பெங்களூரு: விண்வெளி தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த அக்னிகுல் புத்தாக்க நிறுவனம் முதன்முதலாக கட்டமைத்த ஏவுதளத்தை திறந்துள்ளது. இது, இந்தியாவில் திறக்கப்படும் முதல் தனியார் ஏவுதளமாகும்.
இதுகுறித்து அக்னிகுல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. அக்னிகுல் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்து, ஸ்ரீஹரி கோட்டாவில் கட்டமைத்துள்ள ஏவுதளத்தை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நவ.25-ல் திறந்து வைத்தார்.
இஸ்ரோ மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) உதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுதளம் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. அதன்படி, அக்னி குல் ஏவுதளம் மற்றம் அக்னிகுல் மிஷன் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.
இந்த இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் முக்கியமான அமைப்பு ஒவ்வொன்றும் 4 கி.மீ. தொலைவில் உள்ளன. திரவநிலை எரிபொருளை மனதில் கொண்டு இந்த ஏவுதளம் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ளது.
இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடன் தேவையான தரவுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் திறனை இந்த ஏவுதளம் கொண்டுள்ளது. இவ்வாறு அக்னிகுல் தெரிவித்துள்ளது.