டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை கடந்த 6 நாள்களுக்கு முன்பு ஹேக்கர்கள் ஹேக் செய்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். அதனை மீண்டும் பழைய நிலைக்கு இன்னும் கொண்டு வரமுடியவில்லை. சர்வரை விடுவிக்கவேண்டுமானால் ரூ.200 கோடி கொடுக்கவேண்டும் என்று ஹேக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் அந்த பணத்தை கிரிப்டோகரன்சியில்தான் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் பணம் கேட்டு எந்த கோரிக்கையும் வரவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். சர்வர் முடங்கியதால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அனைத்தும் முடங்கிப்போய் இருக்கிறது. இதனால் நோயாளிகள் வருகை உட்பட அனைத்தும் தற்போது கம்ப்யூட்டர் இல்லாமல் நோட்டுப்புத்தகங்களில் எழுதப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நாடு முழுவதும் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் டேட்டாக்களை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளும்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டேட்டாக்களை திரும்ப பெறுதல், சர்வர் பணிகள் நடந்து வருகிறது.
டேட்டாக்களின் அளவு அதிகமாக இருப்பதால் அதனை மீட்டெடுப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. சர்வர் இயங்காமல் இருப்பதால் மருத்துவமனையின் அனைத்து சேவைகளும் கம்ப்யூட்டர் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் சர்வர் ஹேக் செய்யப்பட்டது குறித்து டெல்லி போலீஸார், உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது விசாரணை ஏஜென்சிகளின் பரிந்துரையின் பேரில் மருத்துவமனையின் கம்ப்யூட்டருக்கு இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சர்வரில் விஐபிக்கள், முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அதிகாரிகள், நீதிபதிகளின் தகவல்களும் இடம் பெற்று இருக்கிறது.
அதோடு சர்வர் ஹேக் செய்யப்பட்டு இருப்பதால் 5 கோடி நோயாளிகளின் டேட்டாக்கள் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது எய்ம்ஸ் மருத்துமனையில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 5000 கம்ப்யூட்டரில் 1500 கம்ப்யூட்டருக்கு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு 50 சர்வர்களில் 20 சர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.