பீஜிங்: சீனாவில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிபர் ஷீ ஜின்பிங் பதவி விலக கோரி வெடித்துள்ள மக்கள் போராட்டம், தலைநகர் பீஜிங் வரை பரவியது.
சீனாவின் வூஹான் நகரில் 2019 டிசம்பரில் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. அங்கிருந்து உலகம் முழுதும் பரவிய தொற்று, உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கிப்போட்டது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்று பரவலில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட நிலையில், சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துஉள்ளது. இதையடுத்து அங்கு தொற்று தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் பல்வேறு மாகாணங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், 41 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வுக்கு முக்கிய பங்காற்றும் துறைகளில், ஐந்தில் ஒரு பங்கு முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்குயி என்ற இடத்தில், தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்; ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.
அரசின் கடுமையான சட்ட திட்டங்களால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ஊரடங்கு நடவடிக்கைக்கு எதிராக உரும்குயி மக்கள் கடந்த 26ல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஷாங்காய் நகரிலும் போராட்டம் பரவியது. இதை தொடர்ந்து தலைநகர் பீஜிங்கிலும் மக்கள் போராட துவங்கினர். அங்குள்ள லியாங்மாஹி ஆற்றின் அருகே திரண்ட மக்கள், அதிபர் ஷீ ஜின்பிங்கை பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்தனர். பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலை மாணவர்கள் மற்றும் நான்ஜிங் என்ற இடத்தில் உள்ள பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில வாரங்களில் சீனாவின் குவாங்டாங், சேங்சோ, லாசா உள்ளிட்ட மாகாணங்களில் போராட்டம் வலுத்துள்ளது.
2 நாடுகளில் நிலச்சரிவு: குழந்தை உட்பட 21 பேர் பலி
மிலன்: இத்தாலி மற்றும் கேமரூன் நாடுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பிறந்து மூன்று வாரங்களே ஆன குழந்தை உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் அமைந்துள்ள இச்சியா தீவு, உலக அளவில் சுற்றுலாப் பயணியரின் மனம் கவர்ந்த இடமாக திகழ்கிறது. இங்கு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள காசாமிச்சியோலா என்ற இடத்தில் 26ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், பிறந்து மூன்று வாரங்களே ஆன குழந்தை, இரண்டு சிறுமியர் உட்பட ஏழு உடல்களை மீட்டனர். அங்கு தங்கியிருந்த மேலும் ஐந்து பேரை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஆப்ரிக்காவில் 14 பேர்:
இதற்கிடையே, வடக்கு ஆப்ரிக்க நாடான கேமரூன் தலைநகர் யாவுண்டேவில் நேற்று முன் தினம், ஒரு வீட்டில் இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இதில், 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அமெரிக்க ஏரியில் மூழ்கி தெலுங்கானா மாணவர்கள் பலி
ஹூஸ்டன்: அமெரிக்காவில் ஏரியில் குளித்த இரண்டு இந்திய மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த உதேஜ் குன்டா, 24, சிவ கெல்லிகரி, 25 இருவரும், அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள பல்கலையில் படித்து வந்தனர். கடந்த 26ம் தேதி அங்குள்ள ஓசர்க்ஸ் ஏரிக்கு சென்றனர். முதலில் ஏரியில் குதித்த உதேஜ் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்தார். அவரைக் காப்பாற்ற கெல்லிகரி ஏரியில் குதித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக இருவருமே நீரில் மூழ்கினர்.
மீட்புப் படையினர் வந்து, இரண்டு மணி நேரத்துக்குப் பின், உதேஜ் உடலை கண்டுபிடித்தனர். கெல்லிகரியின் உடல் மறுநாள்தான் கிடைத்தது. அமெரிக்க ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரு மாணவர்களுக்கும், தெலுங்கானா அமைச்சர் ராமாராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இருவர் உடல்களையும் தெலுங்கானாவுக்கு எடுத்துவர அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்