பெய்ஜிங்: சீனாவின் பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அமலில் இருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவுவதால், சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
சீனாவில் கடந்த 3 நாட்களாக தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 39,791 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், அங்கு ‘ஜீரோ கோவிட்’ என்ற கொள்கையை சீன அரசு கடைப்பிடித்து வருகிறது. ஏராளமான நகரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஏதேனும் ஒரு பகுதியில் கரோனா தொற்று ஏற்பட்டால், அந்தக் குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக தனிமைப்படுத்தப்படுகின்றன. ஜின்ஜியாங் உள்ளிட்ட பல மாகாணங்களில் தீவிர ஊரடங்கும் அமலில் உள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடுகள், அந்நாட்டு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசை எதிர்த்து பொதுமக்கள் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ 2.5 கோடி பேர் வசிக்கும் ஷாங்காயிலும் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கும் போராட்டம் நீடிக்கிறது.
தலைநகர் பெய்ஜிங் அருகில் உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் பேரணி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தவறிய அதிபர் ஜிஜின்பிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சீன அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறும்போது, ‘‘சீன கம்யூனிஸ்ட் கட்சியின்தலைமை மற்றும் மக்களின் ஆதரவுடன், கரோனாவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அரசுக்கு எதிரான நோக்கம் கொண்ட சில சக்திகள், சமூக ஊடகங்களில் கரோனா தொடர்பான தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டாம். கரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ளபகுதிகளில் மட்டும் பொது முடக்கத்தை அமல் செய்யும் முடிவை, சீன அரசும், மாகாண அரசுகளும் இணைந்து மேற்கொள்ளும்’’ என்றார்.