ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட், ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் கட்டிடக் கலை, கட்டமைப்பு நிபுணர்களுக்கு ‘சீர்மிகு பொறியாளர் விருது 2022’ – சென்னை மியூசிக் அகாடமியில் டிச.1-ம் தேதி விழா

சென்னை: கட்டிடக் கலை, கட்டமைப்பு கலையில் சிறந்து விளங்குவோருக்கு ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘சீர்மிகு பொறியாளர் விருது – 2022’ வழங்கப்படுகின்றன. சென்னை மியூசிக் அகாடமியில் வரும் டிச.1-ம் தேதி நடைபெறும் விருது விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இத்துறை வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு துறையில் சிறந்து விளங்கும் பொறியாளர்கள் பலர், தமிழ்ச் சமுதாயத்தின் பொதுவெளியில் இன்னமும் அறியப்படாமல் உள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க பொறியாளர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘சீர்மிகு பொறியாளர் விருது – 2022’ஐ வழங்கி, பாராட்டி கவுரவிக்கும் முயற்சியை ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்தது.

இந்த நிகழ்வை ரினாகான் ஏஏசி ப்ளாக்ஸ், சூர்யதேவ் அலாய்ஸ் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட், லெட்சுமி செராமிக்ஸ், டாக்டர்எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.‘சீர்மிகு பொறியாளர் விருது’ வழங்கும் விழா வரும் டிசம்பர் 1-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் டீன் டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், ராம்கோ சிமென்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ்ணன், அதன் செயல் இயக்குநர் (மார்க்கெட்டிங்) பாலாஜி கே.மூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். கிராமப்புற வீட்டு கட்டுமானம், நகர்ப்புற குடியிருப்பு கட்டுமானம், பொதுச்சேவை கட்டமைப்புகள், பொதுப் பயன்பாடு கட்டமைப்புகள், தொழிற்சாலை

கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளில் தமிழகம், புதுச்சேரி பொறியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் இணையப் பக்கம், முகநூல், ஈவண்ட்ஸ் ஆகிய பக்கங்களிலும், வாட்ஸ்-அப் மூலமாகவும் அனைவரிடத்தும் இச்செய்தி பரவலாக கொண்டுசெல்லப்பட்டது.

இதன் காரணமாக சீர்மிகு பொறியாளர் விருதுக்கு ஆன்லைன் வழியாக 230-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு விண்ணப்பித்தனர். நடுவர் குழுவின் முதல்கட்ட பரிசீலனையில் 53 பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் நேரடியாக சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர்ஏ.ஆர்.சாந்தகுமார், விஐடி பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் சிவில் இன்ஜினீயரிங் பேராசிரியர் மற்றும் டீன் டாக்டர் ஏ.எஸ்.சாந்தி, சிஎஸ்ஐஆர் இயக்குநர் டாக்டர் என்.ஆனந்தவல்லி ஆகியோர் நடுவர்களாக இருந்து, 2-ம் கட்ட தேர்வுக்கு வந்த பொறியாளர்களில் இருந்துவிருதுக்கு தகுதியான 35 பொறியாளர்களை தேர்வு செய்துள்ளனர்.

விருது வழங்கும் விழாவை இணைந்து வழங்கும் ராம்கோ சூப்பர்கிரீட் நிறுவனத்தின் பிராண்ட் மேனேஜ்மென்ட் உதவி துணைத் தலைவர் ரமேஷ் பரத்கூறும்போது, ‘‘பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறி வருவதற்கு இன்ஜினீயர்கள் முக்கிய காரணமாக உள்ளனர். கட்டிடத் தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்வதற்கு சிவில் இன்ஜினீயர்கள் மற்றும் கட்டமைப்புத் துறையில் பணியாற்றும் அனைவருமே சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

அத்தகைய சிறப்புக்குரிய இன்ஜினீயர்களை பாராட்டி கவுரவித்து, விருதுகளை வழங்கும் முயற்சியை ராம்கோ சிமென்ட், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து முதல் ஆண்டாக முன்னெடுத்திருப்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது. ராம்கோ அனைத்து இன்ஜினீயர்களோடும் கைகோத்திருக்கும் ஒரு நிறுவனமாகும்.

பொறியாளர்கள், ஸ்ட்ரக்சுரல் இன்ஜினீயர்களுக்கு விருதுகளை வழங்குவது இரு துறையினரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, இரு துறையினரின் பங்கேற்பை இன்னும் ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறோம். இதில் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள்நன்றி. இது ஆண்டுதோறும் இன்னும் பெரிய அளவில் தொடர வேண்டும் என்பதே எங்கள் ஆசை’’ என்றார்.

இந்நிகழ்வை இணைந்து நடத்தும் நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் கூறியதாவது: ரினாகான் ஏஏசி ப்ளாக்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர்.பி.செல்வசுந்தரம்: ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கட்டிடத் துறை. பாலங்கள், பெரிய கட்டிடங்கள், வீடுகள், விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் ஆகியவற்றை கொண்டே ஒரு நாட்டின் வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. இந்தியா சூப்பர் பவர் நாடாக வளர்வதற்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது.

அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கட்டிடங்களின் எடையைகுறைப்பது, தரத்தை அதிகரிப்பது, விரைவாக கட்டுவது போன்றவற்றை கைக்கொள்ள வேண்டியுள்ளது. இதில் முக்கியபங்குவகிக்கும் இன்ஜினீயர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவதன் மூலமாக அவர்களது செயல்பாடுகள் இன்னும் நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்கும். அத்தகைய செயல்பாட்டில் எங்கள் நிறுவனம் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியே.

சூர்யதேவ் அலாய்ஸ் அண்ட் பவர் பிரைவேட் லிமிடெட் பொது மேலாளர் (மார்க்கெட்டிங்) எஸ்.பாலச்சந்திரன்: ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று சீனா நம்மை விட முன்னேறி வருவதற்கு காரணம், அந்த நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியே. இடையே சற்று பின்தங்கியிருந்த நாம், தற்போது முழு வேகத்தோடு செயல்பட்டு வருகிறோம். மெட்ரோ ரயில், தேசிய நெடுஞ்சாலைகள், 30 மாடி, 40 மாடி கட்டிடங்கள் என அனைவரின் வாழ்வாதாரத்தையும் மாற்றும் வகையில் பல பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

ஒரு நகரத்தோடு இன்னொரு நகரத்தை இணைப்பது தற்போது வெகு எளிதாகிவிட்டது. இன்றைக்கு சாட்டிலைட் டவுன்ஷிப் மூலம் பல முன்னேற்றங்கள் சாத்தியமாகி உள்ளன. நாம் வல்லரசாக மாற,உள்கட்டமைப்பு வளர்ச்சி மிகவும் அவசியம். அப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இன்ஜினீயர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வில் நாங்களும் இருப்பதில் பெருமை கொள்கிறோம்.

லெட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன்: உணவு, உடையை அடுத்து இந்தியாவின் 3-வதுமுக்கியமான துறை கட்டுமானத் துறை.விவசாயத்துக்கு பிறகு, அதிக வேலைவாய்ப்பை வழங்கும் 2-வது துறையாககட்டுமானத் துறை உள்ளது. இத்துறையில் அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. பலரது கூட்டு முயற்சியில் உருவாகும் சிம்பொனி இசைபோல, கட்டுமானத் துறையில் பலரும் கூட்டாக வேலை செய்வதால்தான் கட்டிடம் உருவாகிறது.

‘வீட்டை கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்’ என்பார்கள். இந்த கட்டிடத் துறையில் ஒருங்கிணைப்பு பணி (கோஆர்டினேஷன்) மிகவும் சவாலானது. இது இன்னும் அமைப்பு சாரா துறையாகவே உள்ளது. அடையாளம் தெரியாத பல இன்ஜினீயர்களே இத்துறையின் முதுகெலும்பாக உள்ளனர். எந்த பொருள் வாங்கினாலும் அதன் தரத்தை உறுதி செய்து, வாரன்டி தரப்படுகிறது. ஆனால், கட்டிடத் துறையில் அவ்வாறு யாரும் தருவதில்லை. தரக்கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும்போது இத்துறை மேலும் வளரும். சீர்மிகுபொறியாளர் விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

டாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சிநிகர்நிலை பல்கலைக்கழக கட்டிடக்கலை துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் ஸ்வேதா மதுசூதனன்: கட்டிடம் மற்றும் கட்டமைப்புக் கலைக்காக வழங்கப்படும் ‘சீர்மிகு பொறியாளர் விருது-2022’ நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல நிறுவனங்களோடு இணைந்துமுன்னெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த முன்னெடுப்பில் 230-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்துகொண்டிருப்பது நல்ல தொடக்கம்.

இன்றைய நவீன தொழில்நுட்பத் துறையில் கட்டிடக் கலை பல உயரங்களை தொட்டிருக்கிறது. இத்துறையின் திறமையாளர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் ‘சீர்மிகு பொறியாளர் விருது’ நிகழ்வில் எங்களது டாக்டர் எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகமும் இணைந்திருப்பதில் பெருமையே. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அனைத்து துறைகளிலும் திறன் வாய்ந்த பலர் இருந்தாலும், கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் துறையில் சிறந்துவிளங்கும் பொறியாளர்களை அடையாளம்கண்டு, அவர்களுக்கு ‘சீர்மிகு பொறியாளர் விருது-2022’ வழங்குவதன் மூலமாக இன்னும் பல திறன்மிக்க பொறியாளர்கள் தமிழகத்தில் வருங்காலத்தில் உருவாகுவர் என்பது நிச்சயம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.