புதுடெல்லி: கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம் என்றும் இதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு (கொலீஜியம்) நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி களை நியமிப்பதற்கான பரிந் துரையை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக..
இதைப் பரிசீலித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். இந்தக் குழுவில் தலைமை நீதிபதியுடன் 4 மூத்த நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு 11 நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலீஜியம் வழங்கிய பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதை எதிர்த்து பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்தசூழலில் கொலீஜியம் நடைமுறையை மாற்ற வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு சமீபத்தில் கூறியிருந்தார்.
மத்திய அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் ஆஜராகி, கொலீஜியம் நடைமுறைக்கு எதிரான மத்திய சட்ட அமைச்சரின் கருத்தை நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
இதைக்கேட்ட நீதிபதி எஸ்.கே.கவுல், மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கட் ரமணியிடம், “கொலீஜியம் நடைமுறை குறித்து சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால், அது இந்த மண்ணின் சட்டம். அதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும். இந்தத் தகவலை மத்திய அரசிடம் எடுத்துக் கூறுங்கள். கொலீஜியம் பரிந்துரையை நீண்டகாலம் கிடப்பில் வைத்திருக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்லுங்கள்.
பொதுவாக நீதித் துறை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் விமர்சன அறிக்கைகளை நாங்கள் புறக்கணித்து விடுகிறோம். ஆனால், உயர் பொறுப்பில் இருப்பவர் விமர்சனம் செய்துள்ளார். இது நடந்திருக்கக் கூடாது.
மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை கிடப்பில் வைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
கொலீஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலக் கெடுவை மத்திய அரசு மதிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுங்கள். கடுமையான முடிவு எடுக்கும் நிலைக்கு நீதித் துறையை ஆளாக்க வேண்டாம்” என்றார்.
கொலீஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மதிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்.