4 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்: தமிழகத்தில் 17 லட்சம் பேர் மனு

சென்னை: தமிழகம் முழுவதும் 4 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 17 லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர். இதில் 7.57 லட்சம் பேர் பெயரைச் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான அன்றைய தினமே வாக்காளர் திருத்தப் பணியும் தொடங்கியது. இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு உள்ளிட்டவற்றைச் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்வதற்காக அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, நவ. 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 4 நாட்களில் 2 கட்டமாக வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது.

தமிழகத்தில் கடந்த 9-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களின் வசதிக்காக நவ.12, 13, 26, 27-ம்
தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் இதுவரை 17 லட்சத்து 2 ஆயிரத்து 689 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயரைச் சேர்க்கவும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு பெயரை மாற்றவும் படிவம் 6-ஐ அளிக்க வேண்டும். அதன்படி, தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 57 ஆயிரத்து 341 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், இங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கலாம். இதற்கு படிவம் 6ஏ வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் படிவத்தை இதுவரை 9 பேர் அளித்துள்ளனர். பெயர் சேர்க்கப்படும் பட்சத்தில், அவர்கள் தேர்தலின்போது நேரில் வந்து வாக்களிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்கவும், பெயர்கள் சேர்க்கப்படுவதற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்கவும் படிவம் 7 பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இதுவரை 6 லட்சத்து 5 ஆயிரத்து 62 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, வாக்காளர் பட்டியலில் தங்களது விவரங்களில் திருத்தம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 277 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.