இலங்கை பறவைகளின் பாதுகாப்பு நிலை குறித்த புதுப்பிக்கப்பட்ட சிவப்பு தரவுப் பதிவு – 2021, வெளியீட்டு நிகழ்வு சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் ,சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நசீர் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில் “சுற்றாடலை பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பு. அந்த பொறுப்பு குடிமக்களாகிய நம் அனைவருக்கும் உண்டு. பறவைகள் நம் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவை. சிவப்பு பட்டியல் ஒரு இனத்தின் இருப்புக்கான பல உள் மற்றும் வெளிப்புற காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இயற்கை வள நிர்வாகத்தில்; செயல்திறனைக் கண்காணிப்பதற்கான ஒரு குறிகாட்டியாக சிவப்புப் பட்டியலைப் பயன்படுத்தலாம் “என்றார்.
சுற்றாடலைப் பாதுகாப்பதுடன் பறவைகள் மற்றும் வன வளங்களையும் பாதுகாக்க அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை போன்ற சிறிய தீவில் உள்ள பறவைகளுக்கு இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுப்பது முக்கியமானது. மதிப்பிடப்பட்டுள்ள 244 பறவை இனங்களில் 81 இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. சிவப்புப் பட்டியல் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பறவைகள்; பற்றிய தரவுகளை உள்ளடக்கியிருப்பது சிறந்த பணியாகும் என்று அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் தேவக வீரகோன்இ அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.