புதுடில்லி :உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான உச்ச நீதிமன்ற ‘கொலீஜியத்தின்’ பரிந்துரை மீது, மத்திய அரசு முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது, நியமன நடைமுறையையே விரக்தி அடைய செய்வதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி
தெரிவித்தது.நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்க, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கிறது. ‘இந்த பரிந்துரையை ஏற்று 3 – 4 வாரங்களுக்குள் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஒருவேளை கொலீஜியம் பரிந்துரைத்துள்ள பெயர்களில் அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அதன் காரணத்தை குறிப்பிட்டு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தில், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது குறித்து, கர்நாடகாவின் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தாமதம் தொடர்பாக பதில் அளிக்குமாறு, சட்டத்துறை செயலருக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பி கடந்த 11ல் உத்தரவிட்டது. இந்நிலையில்இந்த மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்த பின் அந்த பணி முடிவடைந்து விட்டதாக அர்த்தம். அதன் மீது முடிவெடுக்க மத்திய அரசு கால தாமதம் செய்வது, நியமன நடைமுறையை விரக்திக்குள்ளாக்குகிறது.கொலீஜியம் பரிந்
துரைத்த சில பெயர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த கால தாமதத்தால், சில வழக்கறிஞர்கள் பரிந்துரை பட்டியலில் இருந்து தங்கள் பெயர்களை திரும்பப் பெற கோருகின்றனர். கொலீஜியம் ‘சீனியாரிட்டி’ அடிப்படையில் பெயர்களை பரிந்துரைக்கிறது. ஆனால், சில நேரங்களில் அந்த பெயர் பட்டியலில் இருந்து ஒன்றிரண்டு பெயர்களை மட்டும் அரசு தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளிக்கிறது.
இது, ‘சீனியாரிட்டி’ நடைமுறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசின் இந்த கால தாமதம் எல்லை மீறி செல்கிறது. இந்த வழக்கில், அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகின்றனர். இந்த இரட்டை குழல் துப்பாக்கி வேலை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக அரசுக்கு நீங்கள் ஆலோசனையையும், அறிவுரையையும் வழங்குவீர்கள் என நம்புகிறோம்.ஒரு சில உயர் நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதி பரிந்துரை கூட முடிவெடுக்கப்படாமல் கிடக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களாக இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் நீதித்துறை முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு எங்களை
தள்ளிவிடாதீர்கள்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.இதற்கிடையே, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்த கொலீஜியத்தின் 20 கோப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு
கோரி, உச்ச நீதிமன்றத்துக்கே மத்திய அரசு நேற்று திருப்பி அனுப்பியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement