Pre matric scholarship: மத்திய அரசின் கல்வி உதவித்தொகை நிறுத்தம்.. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எம்.பி நவாஸ் கனி கடிதம்!

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கான Pre Matric Scholarship வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும்.

சிறுபான்மை மாணவர்களை வஞ்சிக்கும் இம்முடிவினை ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி எம்பி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு கடிதம்:

இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு நவாஸ்கனி எம்பி எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மை நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த Pre Matric Scholarship இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை சமூக மாணவர்களை வெகுவாக பாதிக்கும் நடவடிக்கையாகும்.

கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி நடுநிலை கல்வி வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி இந்த கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த Pre Matric Scholarship ஆனது மாணவர்களின் கல்விக் கட்டணங்களை மட்டும் சார்ந்தது அல்ல, Pre Matric Scholarship வழங்கப்படுவதற்கான காரணிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையதள முன்னுரையே தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

Pre Matric Scholarship:

Pre Matric Scholarship ஆனது பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காகவும், பள்ளிக் கல்விக்கான நிதி சுமையை குறைத்து பள்ளிக் கல்வியை முழுமைப்படுத்த உதவுவதற்காகவும், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வியை உறுதி செய்வது, கல்வியின் மூலம் அதிகாரப்படுத்துதல் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையதளம் தெளிவுபடுத்துகிறது.

சிறுபான்மை சமூக கல்வி, சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சியாக இத்திட்டத்தினை குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த உதவித்தொகையானது கல்வி கட்டணத்திற்கு மட்டுமான உதவித்தொகையாக நிச்சயமாக பார்க்க முடியாது என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்.

கல்வி கட்டணத்தையும் தாண்டி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போக்குவரத்து, உணவு, சீருடை, கல்விச் சுற்றுலா உள்ளிட்ட இதர செலவுகளுக்கு தங்களுடைய வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. உணவு, சீருடை உள்ளிட்டவை அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்குவது நடைமுறையில் இருந்தாலும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அப்படி ஒரு நிலை இல்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கும் அது அல்லாத பல்வேறு செலவினங்கள் உள்ளன.

சிறுபான்மை மாணவர்கள் கல்வி பொருளாதார வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ளார்கள் என்பதினை சச்சார் குழுவின் அறிக்கைகள் அரசிற்கு தெளிவுபடுத்தி உள்ளன. எனவே கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு மற்ற மாணவர்களோடு சம வாய்ப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஈடுகொடுக்க சமூகநீதி அடிப்படையில் கல்வி உதவித் தொகையை வழங்குவது அரசின் கடமை.

சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் தங்களது முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்:

எனவே கல்வி உரிமைச் சட்டம் 2009 -ஐ சுட்டிக்காட்டி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை Pre Matric Scholarship திட்டத்தினை நிறுத்துவது என்பது சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் தங்களது முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Pre Matric Scholarship வழங்கும் முறையிலேயே தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி எம்பி ஒன்றிய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.