விசாகப்பட்டினம்: கடற்படை தினம் கொண்டாடபடுவதயொட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பிரமாண்ட ஒத்திகை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்கரை தளத்தில் நடைபெறும் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் விசாகப்பட்டினம் கடல் பகுதியில் கடற்படை சார்பில் பிரமாண்ட ஒத்திகை நடைபெற்றது. டேங்கர்கள், நீர்முழ்கி கப்பல், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை கொண்டு நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சி கடற்கரை பகுதியில் இருந்த மக்களை வியக்க வைத்தது. தேசியக் கொடி மற்றும் கடற்படை கொடியை தாங்கி சென்ற ஹெலிகாப்டர்கள் வாணில் வட்டமிட்டனர்.
ஒத்திகை நிகழ்ச்சி நிறைவாக போர்க்கப்பல்களில் இருந்து வாண வேடிக்கை அரங்கேறிய நிலையில் கடற்கரையில் வீரர்கள் அணிவகுத்து சென்ற நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரின் போது டிசம்பர் 4-ம் தேதி பாகிஸ்தான் கராய்ச்சி துறைமுகத்தில் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்க்கப்பலை தாக்கி அழித்தனர்.
அந்த போரில் இந்தியா வெற்றிபெற கடற்படையினரின் அதிரடி தாக்குதல் முக்கிய காரணமாக இருந்தது. இதனையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.