கோவாவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய 53ஆவது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎப்எப்ஐ – IFFI) நடுவர் குழு தலைவருமான நடாவ் லபிட் தலைமை ஏற்றார்.
நிறைவு விழாவில் பேசிய நடாவ் லபிட், “நாங்கள் அனைவரும்(நடுவர் குழு), 15 ஆவது படமான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’-ஆல் சஞ்சலமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரசார நோக்கிற்காக தயாரிக்கப்பட்ட இழிவான ஒன்று. இத்தகைய மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப்போட்டிப் பிரிவுக்கு இப்படம் கொஞ்சமும் பொருத்தமற்றது என்று நாங்கள் உணர்கிறோம்.” என்று காட்டமாக விமர்சித்தார்.
மேலும், “இந்த உணர்வுகளை உங்களுடன் மேடையில் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவதில் நான் முற்றிலும் செளகரியமாக உணர்கிறேன். ஏனெனில், ஒரு திரைப்பட விழாவின் நோக்கம், கலைக்கும் வாழ்க்கைக்கும் இன்றியமையாத விமர்சன விவாதத்தை ஏற்றுக்கொள்வதே.” என்றும் நடாவ் லபிட் தெரிவித்தார்.
கோவாவில் நடைபெற்ற 53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலகின் பல நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அந்த வகையில், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ‘பனோரமா’ பிரிவில் தங்க மயில் விருதுக்காக போட்டியிட்ட மூன்று இந்திய படங்களில் ஒன்று. இந்த படத்திற்கு எந்த விருதுகளும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து இறுதி விழாவில், தேர்வுக் குழு தலைவர் நடாவ் லபிட், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது விமர்சனத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
’தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் பற்றி விழா மேடையில் இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லபிட் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கோவா சர்வதேச திரைப்பட போட்டிக்கான தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்த ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி வெளியானது. இப்படம் 1990களில் காஷ்மீரிலுள்ள பண்டிட்கள் தீவிராதிகளால் அனுபவித்த சித்தரவதை, அங்கிருந்து அவர்கள் வெளியேறியதற்கான காரணங்கள், அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் ஆகியவற்றை சொல்லும் படமாக இருந்தது. ஆனால், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அப்படம் காட்ட தவறி விட்டதாக எதிர்மறையான விமர்சனங்களும் அப்படத்துக்கு எதிராக எழுந்தன.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரால் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பெருமளவில் கொண்டாடப்பட்டது. பாஜக ஆளும் சில மாநிலங்களில் இந்த திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது மட்டுமின்றி, பாஜக முதலமைச்சர்கள் சிறப்புக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். மத்திய பிரதேசத்தில் காவல் துறையினருக்கு இந்த திரைப்படத்தை பார்க்க ஒரு நாள் விடுமுறையும் அளிக்கப்பட்டது.
இந்த சர்ச்சை குறித்து தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இன்னமும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும். #CreativeConsciousness” என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.