தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற பெயரில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று, தலைநகர் ஐதராபாத்தில் உள்ள முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட, ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காரில் சென்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்து வெளியே வரும்படி, ஒய்.எஸ்.ஷர்மிளாவிடம் போலீசார் கேட்டனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து கிரேன் இழுவை வாகனத்தை கொண்டு வந்த போலீசார், ஒய்.எஸ்.ஷர்மிளா காருக்கு உள்ளே இருக்கும் போதே, காரை கொக்கி போட்டு இழுத்துச் சென்றனர். இது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில், காருக்குள்ளே இருந்து வெளியே வரும்படி, ஒய்.எஸ்.ஷர்மிளாவிடம் போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் காரின் கதவை அவர் திறக்கவில்லை. இதை அடுத்து டூப்ளிகேட் சாவி செய்யும் நபரை வரவழைத்த போலீசார், ஒருவழியாக காரின் கதவை திறந்து, ஒய்.எஸ்.ஷர்மிளாவை வெளியே வர வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் ஒய்.எஸ்.விஜயலட்சுமி, மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவை பார்க்க வீட்டில் இருந்து புறப்பட்டார். இதை அறிந்த போலீசார், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். இந்த சம்பவத்திற்கு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று தனியார் தொலைகாட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ கேசிஆர் கட்சி எங்களை அவமதித்துவிட்டது. எங்கள் தொண்டர்களை அவமானம் செய்துவிட்டது. தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். கேசிஆர் கட்சியின் குண்டர்களால் சேதப்படுத்தப்பட்ட எங்களது வாகனங்களை கொண்டு பேரணி நடத்த உள்ளோம். தெலங்கானாவில் ஜனநாயம் செத்துபோய் விட்டது.
ஒரு வருடத்திற்கு முன்பு எனது கட்சியை தொடங்கினேன். நிறைய தடைகளை கடந்து இன்று இந்தநிலைக்கு வந்துள்ளோம். 3500 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளேன். மக்கள் மத்தியில் எனது கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனக்கு தெலங்கானாவில் நல்ல வாய்ப்பு உள்ளது. எனது தந்தையின் ஆட்சி காலத்தை திரும்ப கொண்டு வருவேன் என மக்கள் நம்புகின்றனர்.
கேசிஆர் சிறந்த முதல்வர் என தன்னை தானே கருதி கொள்கிறார். ஆனால் அது உண்மை இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். பெண்களுக்கு வட்டி இல்லா கடன் மற்றும் வேலைவாய்ப்புகளில் இந்த அரசாங்கம் தோற்றுவிட்டது. ஒருகல் பகுதியில் எந்த வித தாக்குதல் சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் போலீஸார் கேசிஆர் குண்டர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். அதனால் தான் என்னை கைது செய்தனர்.
‘ராவணன் போல் மோடிக்கு 100 தலையா இருக்கு?’ – மல்லிகார்ஜூன கார்கே காட்டம்!
நான் தெலங்கானாவில் வளர்ந்தவர்ள். இங்கு தான் திருமணம் செய்துள்ளேன். என்னுடைய மகனும், மகளும் இங்கு தான் பிறந்தனர். இந்த மாநிலத்தைச் சேர்ந்தவள் தான் நான். என்னுடைய எதிர்காலம் இங்கு தான். தெலங்கானாவில் கட்சி ஆரம்பித்தது பற்றி தெலுங்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் எனக்கு அக்கறை இல்லை’’ என அவர் தெரிவித்தார்.