பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தில் நிலம் இல்லாத மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிலம் வழங்குவதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் நிலம் இல்லாத மக்களுக்கு நிலம் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் 5,24,000 பயனாளர்களில் இதுவரை 2,75,000 பயனாளர்களுக்கு பல்வேறு மாநிலங்கள் நிலம் ஒதுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை.
மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழ்நாட்டில் 96,806 பேருக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கவில்லை என தெரியவந்துள்ளது. இதேபோன்று பீகார், ஒரிசா, அசாம் மாநிலங்களிலும் பயனாளர்களுக்கு மாநில அரசுகள் நிலம் ஒதுக்கவில்லை.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பயனாளர்களுக்கும் நிலம் ஒதுக்காவிட்டால் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு சிறப்பாக செயல்படும் மற்ற மாநிலங்களுக்கு பிரதமர் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.