திருவண்ணாமலை: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில், 1,433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.89 கோடி பரிசுத்தொகையை முதல்வர் வழங்கியுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 63வது குடியரசு தின தடகளப் போட்டிகள் கடந்த 25ம் தேதி தொடங்கியது. 14 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் நடந்தது. தடகளப் போட்டியின் நிறைவு விழா, திருவண்ணாமலையில் நேற்று மாலை நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறையுடன் விளையாட்டுத்துறை இணைந்து மாணவர்களுக்கு போட்டிகளை நடத்துகிறது.
விளையாட்டுத்துறையை மேம்படுத்த முதல்வர் தனிகவனம் செலுத்துகிறார். அதோடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றி பெறுகிற வீரர்களை உடனுக்குடன் அழைத்து பாராட்டுகிறார், ஊக்கப்படுத்துகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற 15 மாதங்களில் மட்டும், 1,433 வீரர்களுக்கு ரூ.40.89 கோடி பரிசுத்தொகையை வழங்கியிருக்கிறார், என்றார்.